டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், அப்போதைய வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைதான ரையான் ரௌத்திற்கு (Ryan Routh) புளோரிடா நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

59 வயதான ரையான் ரௌத், கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது படுகொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த வழக்கில் அவர் தனக்காகத் தானே வாதாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மாவட்ட நீதிபதி எய்லின் கெனன் (Aileen Cannon) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

ரையான் ரௌத் பல மாதங்களாக இந்தப் படுகொலைத் திட்டத்தைத் தீட்டியிருந்ததோடு, அதற்குத் தடையாக இருப்பவர்கள் எவரையும் கொல்லத் துணிந்திருந்ததாகவும், அவர் தனது செயலுக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அரச தரப்பு சட்டத்தரணிகள், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர். எனினும், தனக்கு 27 வருட சிறைத்தண்டனை மாத்திரம் வழங்குமாறு ரௌத் நீதிபதியிடம் கோரியிருந்தார்.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், தான் ட்ரம்பைக் கொல்லும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மறுத்த ரௌத், சிறையில் தனது ஆளுமைக் குறைபாட்டிற்காக (Personality disorder) உளவியல் சிகிச்சைப் பெறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், முறையான சட்டப் பாதுகாப்பை முன்னெடுக்கத் தெரியாத காரணத்தினால் ஜூரிகள் (Jurors) தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

சம்பவத்தின் பின்னணி கடந்த 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி, வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்ப் சர்வதேச கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த புதர்களுக்குள் ரையான் ரௌத் மறைந்திருப்பதை இரகசிய சேவை அதிகாரிகள் (Secret Service) அவதானித்தனர். அங்கிருந்து தப்பியோடிய அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் மறைந்திருந்த இடத்தில் ஒரு தாக்குதல் ரக துப்பாக்கி மீட்கப்பட்டது.

இதற்கு முன்னர், பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ட்ரம்பின் காது சேதமடைந்திருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது படுகொலை முயற்சி இதுவாகும்.

வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு விசாரணையின் போது, ரௌத் ஆறு கைபேசிகளைப் பயன்படுத்தியதோடு, தனது அடையாளத்தை மறைக்க போலிப் பெயர்களைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சுமார் 10 மணிநேரம் அவர் புதர்களுக்குள் பதுங்கியிருந்ததாக அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

சட்டப் பயிற்சி ஏதுமற்ற நிலையில் தனக்காகத் தானே வாதாடிய ரௌத், தனது ஆரம்ப உரையில் மனித இனத்தின் தோற்றம் மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதி குடியேற்றம் குறித்து தேவையற்ற விடயங்களைப் பேசியதால் நீதிபதியால் எச்சரிக்கப்பட்டார்.

ஜூரிகள் தமது தீர்ப்பை வாசித்தபோது, ரௌத் பேனாவினால் தன்னைக் குத்திக்கொள்ள முயன்றதால் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். "எனது தந்தை யாருக்கும் தீங்கு செய்யவில்லை, அவரை நான் சிறையில் இருந்து வெளியே எடுப்பேன்" என அவரது மகள் நீதிமன்றில் கூச்சலிட்டார்.

இந்தத் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், "அவன் ஒரு தீய எண்ணம் கொண்ட கொடிய மனிதன், அவன் பிடிபட்டுள்ளான்" எனப் பதிவிட்டுள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி