முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம்

நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபாவினால் இரண்டு தனிநபர் பிரேரணைகள் இன்று (05) நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

நாட்டின் சிவில் சட்ட அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பிரஜைகளின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே இப்பிரேரணையின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள்:

1. மீளச் சரிசெய்ய முடியாத வகையில் திருமண உறவு முறிவடைவதன் அடிப்படையில் திருமணத்தை ரத்துச் செய்யும் சட்டம்: திருமணத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் (Irretrievable breakdown) விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகளை வழங்குவதும், இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

2. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து (திருத்தச்) சட்டம்: குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேடுகளில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்குதல், தகுதியுள்ள பெண்கள் காதி (Quazi) பதவிகளை வகிக்க இடமளித்தல் மற்றும் புதிதாக நியமிக்கப்படும் காதிகள் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் போன்ற திருத்தங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்தச் சீர்திருத்தங்கள் ஊடாக இலங்கையின் திருமணச் சட்டம் சர்வதேச தரத்திற்கு அமைய நவீனமயப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Muslim_Marriage_and_Divorce_Amendment_Bill_FINAL

 

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி