2026ஆம் ஆண்டுக்கான தனது புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கையை யனவரி 23ஆம் திகதி அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உலகளாவிய சட்ட திட்டங்களையும், மரபுகளையும் துச்சமாகக் கருதி மத்திய அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தி அந்த நாட்டின் அதிபர் நிக்கலஸ் மதுரோ மற்றும் அவரின் இணையர் ஆகியோரை அதிரடியாகக் கடத்தி வந்து அமெரிக்காவில் சிறை வைத்துள்ளதன் பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. அமெரிக்காவை மாத்திரமன்றி அமெரிக்கக் கண்டத்தையே உள்ளடக்கியதாக வழிமொழியப்பட்டுள்ள இந்த அறிக்கை அடுத்ததாக அமெரிக்க நிர்வாகம் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கின்றதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை படைபலத்தைப் பிரயோகித்தேனும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றார். அந்த விடயத்தில் தனது நட்பு நாடுகளை, குறிப்பாக நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் தனது சகாக்களாக உள்ள நாடுகளைப் பகைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுவது தொடர்பில் கூட அவர் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவந்த கொடிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக ட்ரம்பால் முன்மொழியப்பட்ட சமாதான நடவடிக்கை உலக மன்றமான ஐ.நா. சபையை மேவும் வகையில் அல்லது அந்த அமைப்பை மலினப்படுத்தும் வகையில் அமையும் என எழும் விமர்சனங்களைப் புறந்தள்ளிவரும் ட்ரம்ப் தனது எண்ணத்தைச் செயல்படுத்தும் விடயத்தில் உறுதியாக இருப்பது போலத் தெரிகின்றது. பலஸ்தீன விவகாரத்தில் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட இரு தேசங்கள் என்ற விடயம் நீர்த்துப் போய் உள்ள நிலையில், தற்போதைய நிலையில் காஸாவில் ஹமாஸ் அமைப்பின் எதிர்காலம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் ஈரானில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஈரான் அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகில் எழுப்பப்பட்ட கரிசனைகள் தெஹ்ரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை வெளிப்படையாகவே கோரி நின்றன. இந்த நிலையில் ஈரான் மீது படைபலத்தைப் பிரயோகிக்கப் போவதாக அச்சுறுத்திய அமெரிக்கா, தற்போது தனது போர்க் கப்பல்களை மத்தியதரைக் கடற் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை, இரண்டாவது தடவையாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் ஜரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு விடயங்களுக்கு முன்னுரிமை தராத ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அவரைப் பொறுத்தவரை இந்தப் பிராந்தியத்தின் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கருதப்படும் ரஸ்ய அபாயத்தை(?) எதிர்கொள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளால் முடியும். நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் படைபலத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் அதற்கான விலையை அவர்கள் செலுத்த வேண்டும் என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக உள்ளது.
இத்தகைய பின்னணியிலேயே, அமெரிக்காவின் இந்த ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கையை நோக்க வேண்டி உள்ளது. இந்த 34 பக்க அறிக்கையின் சாரம் அமெரிக்கக் கண்டம் முழுவதையும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதாகவே உள்ளது. உலக சட்ட திட்டங்களை, வழக்காறுகளை மறுதலித்து தனது தேசிய பாதுகாப்பு(?) என்ற விடயம் ஒன்றை மாத்திரமே முன்னிறுத்தி அமெரிக்கா செயற்படும் என்பதுவே இந்த அறிக்கையின் உட்பொருளாக உள்ளது.
ஏகாதிபத்தியக் கனவுகளுடன் கூடிய இந்த அறிக்கையை ஆளும் குடியரசுக் கட்சி மாத்திரமன்றி, எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியும் கூட ஆதரித்து நிற்கிறது என்பது அமெரிக்க அரசியலை நன்கு தெரிந்தவர்களுக்கு வியப்பான விடயமாக இருக்க முடியாது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் கரிசனைக்குரிய பகுதியாக 'தாயகம் மற்றும் (வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தை உள்ளடக்கிய) வடவரைக்கோளம்' என்பதைச் சுட்டி நிற்கிறது. வேறு வகையில் சொல்வதானால் ட்ரம்ப் நிர்வாகத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா என்பது முழு அமெரிக்கக் கண்டத்தையுமே குறிக்கும். தேசிய பாதுகாப்பு என்பது இந்தப் பிராந்தியம் முழுவதற்கும் உரிமை கோருவதாகும்.
அமெரிக்கா முன்வைத்துள்ள புதிய சுலோகம் ஹிட்லர் காலத்து யேர்மனியை நினைவுபடுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ''யேர்மன் பேசுபவர்கள் வாழும் இடமெல்லாம் எமது தாயகமே" என்ற கோசத்தை முன்வைத்தே 1938இல் ஆஸ்திரியா மற்றும் அன்றைய செக்கோஸ்லாவாக்கியாவின் ஒரு பகுதியாக விளங்கிய சுடற்றன்லாந்து ஆகியவற்றை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார் என்பது வரலாறு. இதே பாணியிலேயே கிறீன்லாந்து, பனாமா கால்வாய், மெக்சிகோ வளைகுடா என்பவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளதாக அமெரிக்கா கூறி வருகின்றமையைப் பார்க்க முடிகின்றது.
தன்னுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அடுத்த நிதியாண்டில் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான நிதியை 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என ட்ரம்ப் கோரி நிற்கிறார். அவரது எதிர்பார்ப்பு 1.5 ட்ரில்லியன் டொலராக உள்ளது. ஒரு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 விழுக்காடு பாதுகாப்புத் துறைக்காகச் செலவிடப்பட வேண்டும் என்பது ட்ரம்ப்பின் விருப்பமாக உள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளிடம் ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளில், மொத்த தேசிய உற்பத்தியில் 3.5 விழுக்காடு படைத் துறையின் அடிப்படைச் செலவினங்களுக்கும், 1.5 விழுக்காடு புhதுகாப்புடன் இணைந்த செலவினங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
ட்ரம்பின் இத்தகைய பாதுகாப்புத் துறைச் செலவினங்களுக்கு எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி பேராதரவை வழங்கி நிற்கிறது. இது தொடர்பிலான சட்டமூலம் 22ஆம் திகதி வியாழக் கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஆதரவாக 341 வாக்குகளும் எதிராக 88 வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளில் 64 பேர் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தனர். அதேவேளை, 149 பேர் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகில் படைத் துறை அடிப்படையிலும் பொருண்மிய அடிப்படையிலும் மிகவும் பலம் பொருந்திய நாடாக அமெரிக்காவே உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனைய நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைத்து தனது பலத்தைக் குறைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது என ட்ரம்ப் நிர்வாகம் நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்படாத மூன்றாம் உலகப் போர் ஒன்று உருவாகும் இடத்து, அமெரிக்கக் கண்டத்தைத் தனது பிடியில் வைத்துக் கொள்வதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என அமெரிக்கப் பெரு முதலாளிகள் கருதுகிறார்கள் என நினைக்கவும் இடம் உண்டு. எனினும், படைத் துறையை வலுப்படுத்துவதன் ஊடாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு உள்ளது.
புதிய மூலோபாய அறிக்கையில் சீனா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் நோக்கத்தக்கவை. தனது போட்டியாளராக, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள ஒரு நாடாக சீனா உள்ளதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இராணுவ ரீதியாகத் தலையிடாமலேயே சீனா இந்த இடத்தைப் பிடித்துள்ளதை உணர்ந்து கொண்டுள்ள அமெரிக்கா அதே பாணியைப் பின்பற்ற முனைகிறதோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
தேர்தல் ஜனநாயக முறைமை உள்ள நாடுகளில் மக்களின் வாக்குகளைப் பெற்றே அரசியல்வாதிகள் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். அதேவேளை, நாட்டின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே சிறந்த அறிவாளிகள் எனக் கருதிவிட முடியாது. இன்று உலகில் உள்ள பல ஆட்சியாளர்களைப் பார்க்கும் போது இந்த எண்ணம் தோன்றுவதைத் தடுத்துவிட முடியவில்லை. அந்த இடத்தில் நீங்கள் யாரையாவது பொருத்திப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
-சுவிசிலிருந்து சண் தவராஜா