டொரண்டோ பொலிஸ் ஊழல் விவகாரம்: "பொலிஸ் சேவைக்கு கவலையளிக்கும் நாள்"!

டொரண்டோ பொலிஸ் ஊழல் விவகாரம்: "பொலிஸ் சேவைக்கு கவலையளிக்கும் நாள்"!

கடந்த ஜூன் மாதம் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைப் படுகொலை செய்ய தீட்டப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட ஊழல் விசாரணையில், ஏழு டொராண்டோ பொலிஸ் அதிகாரிகள் சிக்கியுள்ளமை, சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாக யோர்க் பிராந்திய பொலிஸ் மா அதிபர் ஜிம் மெக்ஸ்வீன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராகக் கொலைச் சதி முதல் போதைப்பொருள் கடத்தல் வரையிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யோர்க் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்த இந்த விசாரணையில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 19 பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"பொலிஸ் சேவைக்கு இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் கவலையான ஒரு நாளாகும்" என மெக்ஸ்வீன் குறிப்பிட்டார்.

மெக்ஸ்வீனுடன் இணைந்து வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய டொராண்டோ பொலிஸ் மா அதிபர் மிரோன் டெம்கிவ்வும் இதே கருத்தை வெளியிட்டார்.

"பொலிஸ் சேவையில் ஊழலுக்கு இடமில்லை. இது பொதுமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கின்றது" என டெம்கிவ் தெரிவித்தார்.

வியாழக்கிழமை பிற்பகல் டொராண்டோ பொலிஸ் சங்கம் (TPA) வெளியிட்ட அறிக்கையில், இக்குற்றச்சாட்டுகளினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. "எமது உறுப்பினர்களோ அல்லது சங்கமோ ஊழல்வாதியான ஒரு பொலிஸ் அதிகாரியைப் போன்று வேறு யாரையும் வெறுப்பதில்லை" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நம்பிக்கை மிக முக்கியமானது 

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு எல்லை, ஆட்சேர்ப்புக்கான பின்னணி ஆய்வு, பொலிஸ் தரவுத்தளங்களைப் பயன்படுத்துதல், சான்றுப் பொருட்கள் மற்றும் சொத்து முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளை ஆய்வு செய்யுமாறு கோரி, பொலிஸ் மா அதிபர் டெம்கிவ் கடந்த புதன்கிழமை பொலிஸ் பரிசோதகர் நாயகம் ரையன் டெஷ்னருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

"இது ஒரு வேதனையான மற்றும் அமைதியற்ற தருணம். இந்தச் செய்தி டொராண்டோ மக்களுக்கும் எமது பொலிஸ் சேவை உறுப்பினர்களுக்கும் மனவருத்தத்தை அளிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என டெம்கிவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சுயாதீன மீளாய்வுக்கான டெம்கிவ்வின் கோரிக்கையை ஆதரிப்பதாக மேயர் ஒலிவியா சௌ தெரிவித்தார். வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், குற்றங்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் "சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் பொதுமக்களின் நம்பிக்கை என்பது ஒரு அடிப்படை அங்கமாகும். பொலிஸ் அதிகாரிகளை நம்ப முடியும் என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை டொராண்டோ மக்களுக்கு உண்டு என அவர் மேலும் கூறினார்.

முதலமைச்சர் டக் போர்ட்டின் கருத்து

மாகாண முதலமைச்சர் டக் போர்ட்டும் இது குறித்து கருத்து வெளியிட்டார். இச்சம்பவம் "அதிர்ச்சியளிப்பதாக" குறிப்பிட்ட போதிலும், பொலிஸ் சேவையின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்பட அவர் விரும்பவில்லை.

"எமது சிறந்த பொலிஸ் சேவையின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள்" எனத் தெரிவித்த அவர், எந்தவொரு நிறுவனத்திலும் சில "கறுப்பு ஆடுகள்" (bad apples) இருக்கவே செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒன்டாரியோ லிபரல் கட்சியின் பொதுப் பாதுகாப்பு விமர்சகர் கரேன் மெக்கிரிம்மன், இக்குற்றச்சாட்டுகளினால் தான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறினார். பரிசோதகர் நாயகத்தின் விசாரணையை விட ஒரு படி மேலாக, ஒரு சுயாதீன நீதித்துறை விசாரணையை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஷொப்ரானோஸ்" தொடரைப் போன்ற ஊழல் 

பெரிய டொராண்டோ பகுதியில் (GTA) இழுவை வாகனங்களுக்கு (Tow-truck) இடையிலான மோதல் விவகாரம் "முடிவுக்கு வராத ஒன்றாக" இருப்பதாக விசேட விசாரணைப் பிரிவின் (SIU) முன்னாள் பணிப்பாளர் இயன் ஸ்கொட் தெரிவித்தார்.

"இது ஒரு பாரிய விவகாரம். கனடாவில் இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. பெரும்பான்மையான பொலிஸ் அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்றவே முயல்கின்றனர். ஆனால் இது 'The Sopranos' (குற்றப் பின்னணித் தொடர்) போன்ற ஒன்றைப் போலவே இருக்கின்றது" என ஸ்கொட் மேலும் குறிப்பிட்டார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி