பேரினவாத அடிப்படையில் சிறுமைத்தனமான அரசியல் செய்யும் தலைமைகள்!

பேரினவாத அடிப்படையில் சிறுமைத்தனமான அரசியல் செய்யும் தலைமைகள்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நேற்றைய சுதந்திரதின உரையில் ஒரு முக்கிய விடயம் புதிதாக வெளிப்பட்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

புதிதாக அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, தான் இப்போது அதிகாரப் பொறுப்பை ஏற்றதும், கடந்த 76 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசுகளின் ஆட்சிகள் பெரும் சாபக்கேடு என்றும் இவ்வளவு காலமும் சாபக்கேடான நிலைமையே தொடர்ந்து வந்தது என்றும் தொடர்ச்சியாகப் பிரசாரப்படுத்தி வந்தது.

அதிலிருந்து சற்று மாறுபட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நேற்று சுதந்திர தின உரையை நிகழ்த்தி இருக்கிறார் என்று ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கிறார். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை சிறப்பு கவனம் செலுத்திய ஹர்ஷ டி சில்வா, இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை ஜனாதிபதி குறிப்பிட்டார் என்கிறார்.

'75 ஆண்டுகளாக நாட்டில் நல்லதும் கெட்டதும் நடந்தேறி வருகிறது' என்று கூறி, 75 ஆண்டுகால சாபம் என்ற கருத்தை ஜனாதிபதி தனது இந்த உரையில் நிராகரித்தார் என்பதை ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

'எல்லாமே கெட்டவை அல்ல என்றும் நாங்கள் சொல்லி வருகிறோம். வரலாற்றில் நடந்த நல்ல விஷயங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.

78 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் அடையப்பட்ட வலுவான மற்றும் நியாயமான சாதனைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய ஹர்ஷ டி சில்வா, சிங்கள, தமிழ் மற்றும் ஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு வலுவான நாடாக முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

ஆனால் அங்குதான் பிரச்சினையே - தீராத சிக்கலின் அடிப்படையே - பொதிந்து கிடக்கின்றது. நாட்டின் சிறுபான்மையினரை, அவர்களின் நியாயமான வரலாற்று அபிலாசைகளை, ஆதங்கங்களை, எதிர்பார்ப்புகளை, உள்வாங்கி நியாயம் செய்வதன் மூலம் கௌரவமான - ஒன்றிணைந்த - நாட்டைக் கட்டி எழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி உட்பட இதுவரை அதிகாரத்தில் இருந்த எந்த பௌத்த - சிங்கள ஆட்சி பீடத்திற்கும் திடசங்கற்பமோ, பற்றுறுதியோ இருக்கவில்லை.

இப்போதைய ஆட்சியிலும் அந்த நீதி செய்யும் - நியாயத்தை நிலை நாட்டும் - சிந்தனைப் போக்கே இல்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து ஒரு வலுவான நாடாக முன்னேற வேண்டும் என்ற கனவு தொடர்ந்து பகல் கனவாகவே நீடிக்கப் போகின்றது.

அதை மாற்றியமைப்பதற்கான நீதியான அரசியல் தலைமைத்துவம் இன்னமும் தென்னிலங்கையில் வரவே இல்லை. பேரினவாத அடிப்படையில் சிறுமைத்தனமான அரசியல் செய்யும் தலைமைகள்தான் தொடர்ந்து தென்னிலங்கையில் நீடிக்கின்றன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி