இந்தியாவைச் சேர்ந்த ஒரு மோசடி கும்பல் இயக்கி வந்த, 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆன்லைன் மருந்து தளங்களை முடக்கி, அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், 'ஆப்பரேஷன் மெல்ட்டவுன்' என்ற பெயரில், நாடு முழுதும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து, போலியான பெயரில் நுாற்றுக்கணக்கான ஆன்லைன் மருந்து தளங்கள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த தளங்கள் போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகளை, டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளன. இதனால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், பலர் பாதிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் மருந்து தளங்களை, அமெரிக்க அதிகாரிகள் முடக்கினர். லட்சக்கணக்கான மருந்து விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தளங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து செயல்படும், மோசடி கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது போல வடிவமைக்கப்பட்டு, இந்த தளங்கள் போலியாக இயங்கியுள்ளன. பல தளங்கள் அமெரிக்காவில் இருப்பதாக காட்டிக்கொண்டு, இந்தியாவில் இருந்து, 'பென்டானில், மெத் ஆம்பெட்டமைன்' போன்ற ஆபத்தான பொருட்கள் கலந்த மருந்துகளை அனுப்பியுள்ளது, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய அதிகாரிகளுடன் இணைந்து, இந்த மோசடி கும்பலை முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுபோன்ற சட்டவிரோத ஆன்லைன் மருந்து தளங்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.