அங்கமாலி - எருமேலி சபரிமலை ரயில் பாதை திட்டத்துக்கு, பச்சைக் கொடி காட்டிய கேரள அரசு, 50 சதவீதம் நிதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம் அங்கமாலி - எருமேலி இடையே, 110 கி.மீ., துாரம் சபரிமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
அங்கமாலியில் இருந்து பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, தொடுபுழா மற்றும் பாலா போன்ற நகரங்களுக்கு, இந்த திட்டம் எளிதான இணைப்பை வழங்கும்.
முதல் கட்டத்தில், 8 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தாலும், அவை காலாவதியாகி விட்டன.
நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் முடங்கியது. பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்டத்தின் மொத்த செலவு, 3,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 'இந்த ரயில் பாதை திட்டத்துக்கு மொத்த செலவில், 50 சதவீதம் பங்களிக்க வேண்டியுள்ள கேரள அரசு, நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.