பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ எனும் பெயரிலான பாரிய சோதனை நடவடிக்கையில் இதுவரை ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 17 – முதல் 31 ஆம் திகதிவரையான வெறும் இரண்டு வாரகாலப்பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கிறது.
எனினும் இந்த சோதனை நடவடிக்கைகளின் போது பொது மக்களின் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
யுக்திய நடவடிக்கையுடன் தொடர்புடைய வகையில் இடம்பெறும் சித்திரவதைகள், மிகமோசமாக நடத்தப்படல் மற்றும் தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்துவைத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய சட்ட அமுலாக்க செயன்முறை தொடர்பில் ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், இலங்கை அரசாங்கமும் அதிக அவதானம் செலுத்தவேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
‘‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை முறியடிப்பதே ‘யுக்திய’ நடவடிக்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டது. திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுப்பதும், ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதும் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய வகையில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், மிகமோசமாக நடத்துதல், தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்துவைத்தல் என்பன பற்றிய பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுகுறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அண்மையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்’’ என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்தின் பிரகாரம் இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் சித்திரவதைகள், மிக மோசமாக மனிதத் தன்மையின்றி நடாத்தப்படல் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை உரிமையைக் கொண்டிருக்கின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வுரிமையை மட்டுப்படுத்தவியலாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சந்தேக நபரின் இவ்வுரிமைக்கு மதிப்பளிக்கவேண்டியது கட்டாயமாகும். சோதனை நடவடிக்கைகளின்போது இளைஞர்கள் உள்ளடங்கலாக பலர் பொலிஸாரால் மிகமோசமாகவும், அவமரியாதையாகவும் நடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைகின்றோம். அவைகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சித்திரவதைகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் ஆணைக்குழுவுக்கு 200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. அதுமாத்திரமன்றி சித்திரவதைக்குப் பொறுப்புக்கூறவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் அச்சித்திரவதைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் உயர்பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர். மேலும் தனியார் இல்லங்கள் சோதனையிடப்படும்போதும், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படும்போதும் பொலிஸாருடன் ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும், அதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுவதாகவும் அறியமுடிகின்றது. இது குறித்த நபரின் அந்தரங்க உரிமை மீது நிகழ்த்தப்படுகின்ற மிகமோசமான மீறலாகும்.
மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளவாறு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கதல்ல. அந்த வகையில் யுக்திய வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையிலும் போதைப் பொருள் குற்றவாளிகளைக் குறிவைத்ததாகவும் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்