பிரித்தானியாவில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொடர்ந்து குடிவரவுச் சட்டங்களைக் கடுமையாக்கி வருவதால், அரசியல் புகலிடம் (Asylum) கோரிய பெருமளவானோர் வீதிகளில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிபிசி (BBC) நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு நடுத்தெருவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கால் அதிகரித்துள்ளது. எம்மிடையே இதுபற்றிய செய்திகள் அதிகம் வராவிட்டாலும், இவ்வாறு அநாதரவாகி நிற்கும் புலம்பெயர்ந்தோரிடையே பெருமளவான இலங்கையர்களும் உள்ளனர்.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் மோசடியான முகவர்களிடம் (Agents) ஏமாந்து, பராமரிப்பு உதவியாளர் (Care worker) உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காகப் பிரித்தானியா வந்த பலர், அரசியல் புகலிடம் அல்லது 'நவீன அடிமைத்தனம்' (Modern Slavery) ஆகியவற்றின் கீழ் பாதுகாப்புத் தேடியுள்ளனர். இவர்களில் எவரும் தமது கதையை வெளிப்படையாகச் சொல்லாததால், இவர்களின் அவலநிலை பலருக்கும் தெரிவதில்லை.
சாதாரணமாக அரசியல் புகலிடம் கோருவோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தங்குமிடத்தையும் ஒரு சிறிய கொடுப்பனவையும் வழங்குகிறது. அவர்கள் உணவுடன் கூடிய விடுதிகளில் (Hotels) தங்கவைக்கப்பட்டால், ஒருவருக்கு வாரத்திற்கு 10 பவுண்டுகள் அளவில் அரசாங்கம் வழங்குகிறது. ஆனால், அந்த விடுதிகளில் வழங்கப்படும் உணவு குறித்துப் பாரிய விமர்சனங்கள் உள்ளன.
விடுதிகளுக்குப் பதிலாக அரசாங்கத்தினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளில் தங்கவைக்கப்பட்டால், ஒருவருக்கு வாரத்திற்கு 50 பவுண்டுகள் அளவில் உணவிற்காக வழங்கப்படுகிறது. ஆனால், இந்தக் கொடுப்பனவுகள் அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். ஒரு முடிவு வந்ததும் இந்த வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும்.
ஒருவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதற்கு எதிராக மேன்முறையீடு (Appeal) செய்ய முடியும். இல்லையெனில், தானாகவே முன்வந்து நாடு திரும்பும் (Voluntary Return) திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பச் சம்மதிப்பவர்களுக்கு விமானப் பயணச்சீட்டும் 3000 பவுண்டுகள் பணமும் வழங்கப்படுகிறது. இதனை IOM நிறுவனம் ஒருங்கிணைக்கின்றது.
ஒருவருக்கு அரசியல் புகலிடம் கிடைத்துவிட்டால், அதோடு அரசாங்கம் வழங்கிய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும். அத்துடன் ஒரு மாதத்திற்குள் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறி வேறு ஒரு வீட்டைத் தேடிக்கொள்ள வேண்டும். இங்குதான் பலர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். அரசியல் புகலிடம் கிடைத்தவுடன் வேலை செய்வதற்கு அனுமதி இருந்தாலும், தற்போது பிரித்தானியாவில் ஒரு சாதாரண வேலை தேடுவதே குதிரைக்கொம்பாக உள்ளது.
முன்பு நாம் மாணவர்களாக இருந்த காலத்தில், நேரடியாகவே கடைகளுக்குச் சென்று முகாமையாளருடன் (Manager) பேசி வேலை எடுக்க முடியும். ஆனால் இப்போது அப்படியல்ல. ஒரு துப்புரவுத் தொழிலாளி (Cleaner) வேலைக்குக் கூட இணையத்தளம் (Online) ஊடாக விண்ணப்பித்து, ஒரு பரீட்சையையும் எழுத வேண்டியுள்ளது. இதையெல்லாம் செய்தாலும் வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வாறான நிலையில், இந்த மக்கள் 'சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக' திண்டாடுகின்றனர்.
அடுத்ததாக, தங்குமிடம் தேடுவதில் உள்ள சிக்கல். அரசியல் புகலிடம் கோருவோர் மட்டுமன்றி, சாதாரணமாக இந்த நாட்டிற்கு வருபவர்கள் கூட ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது மிகக் கடினமாக உள்ளது. எவ்வித வருமானமும் இல்லாமல், சான்றுரை பகர (Reference) எவருமில்லாமல் இந்த மக்கள் நடுத்தெருவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதனால், இந்தக் கடும் குளிர்காலத்திலும் ஆங்காங்கே கூடாரங்களை (Tent) அமைத்து உறங்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு, தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்குகளால், வீதிகளில் உறங்கும் இவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அற்ற சூழலே நிலவுகிறது.