சிறுவர் துஷ்பிரயோகக் கும்பலுடன் தொடர்புடைய எப்ஸ்டீனின் ஆவணங்களில் இலங்கையின் பெயரும் அம்பலம்!

சிறுவர் துஷ்பிரயோகக் கும்பலுடன் தொடர்புடைய எப்ஸ்டீனின் ஆவணங்களில் இலங்கையின் பெயரும் அம்பலம்!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற அமெரிக்கரான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அண்மையில் அமெரிக்காவில் பகிரங்கப்படுத்தப்பட்ட புதிய ஆவணங்களில், இலங்கையின் பெயர் 182 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் இலங்கைக்குள் இத்தகைய குற்றச்செயல்கள் எதனையும் புரிந்ததாக அந்த ஆவணங்களில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்குடன் தொடர்புடைய மில்லியன் கணக்கான புதிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் பகிரங்கப்படுத்தியது.

இதன் மூலம், எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணிய உலகின் அதி செல்வந்த மற்றும் அதிகாரமிக்க நபர்களின் பட்டியல் மேலும் நீண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "எப்ஸ்டீன் கோப்புகள்" (Epstein Files) என அழைக்கப்படும் இந்த ஆவணங்களின் புதிய தொகுதி கடந்த ஜனவரி 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதில் மூன்று மில்லியன் பக்கங்கள், 180,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 காணொளிகள் உள்ளடங்கியுள்ளன.

இதில் ரிச்சர்ட் பிரான்சன், பில் கேட்ஸ், இலோன் மாஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், இவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளதாலேயே அவர்கள் குற்றம் இழைத்ததாகக் கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோப்புகளில் இலங்கையின் பெயர் 182 இடங்களில் இடம்பெற்றுள்ளமைக்கான பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

எப்ஸ்டீனின் "லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்" (Little Saint James) எனப்படும் அவரது 'இரகசியத் தீவை' நிர்மாணிப்பதற்காக, உலகப் புகழ்பெற்ற இலங்கை கட்டிடக் கலைஞர் ஜெப்ரி பாவா (Geoffrey Bawa) அவர்களின் தனித்துவமான கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் தரவுகளின்படி, எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான ஜூலியன் லீஸ் (Julian Lees) என்பவர், ஜெப்ரி பாவாவின் கட்டிடக்கலை வடிவமைப்புகள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றினை எப்ஸ்டீனுக்கு அனுப்பியுள்ளார்.

இயற்கையோடு இணைந்த கட்டிடங்களை உருவாக்கும் பாவாவின் பாணியை, தனது தீவிலும் மீள் உருவாக்கம் செய்வது குறித்து அவர்கள் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அந்த ஆறிக்கை குறிப்பிடுகிறது.

ஜூலியன் லீஸ் என்பவர் 80-90 காலப்பகுதியில் பிரபல பிரித்தானிய ஆயுத வியாபாரியாக இருந்த டக்ளஸ் லீஸின் மகன் ஆவார். எப்ஸ்டீனின் ஆவணங்களில் ஜூலியன் ஒரு நண்பராக மாத்திரமன்றி, அவருடன் வணிக ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்திய நெருங்கிய கூட்டாளியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஜூலியன் லீஸ் நீண்டகாலமாக இலங்கையைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருந்தார் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், எப்ஸ்டீனோ அல்லது ஜூலியன் லீஸோ இலங்கைக்குள் எவ்விதமான சட்டவிரோத அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி