இலங்கைக்கு ஐ.நா 22 மில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கைக்கு ஐ.நா 22 மில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கையின் 'மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின்' (HPP) கீழ் இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாகக் கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் எதிர்வரும் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், 'டிட்வா' (Dithva) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கில் இந்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் அண்மைக்கால தரவுகளின்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், இதுவரை பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் 'டிட்வா' சூறாவளியினால் பதிவாகியிருந்தன. இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்திருந்தது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தகவல்களின்படி, கடந்த 2025 டிசம்பர் 29 ஆம் திகதி வரை நிலவிய சூறாவளி காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், இதற்காக ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமானப் பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள், தனியார் துறையினர் மற்றும் இருதரப்பு, பலதரப்பு உதவி வழங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அமைச்சுகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி