வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டுமா?

வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டுமா?

வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு உள்நாட்டுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்த பொறிமுறையொன்றை அமைப்பதற்காக, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கான யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆம் திகதியாகும். ஏற்கனவே பல அமைப்புகள் இதற்குப் பதிலளித்துள்ளன.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு முன்னதாக, உள்நாட்டில் வசித்தாலும் வாக்களிக்கச் செல்ல முடியாத நிலையில் உள்ள வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், முடங்கிப் போனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கே விரைவான தீர்வு அவசியம் என அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 முடக்கநிலைகளுக்கு மத்தியில் 'தொலைதூர வாக்களிப்பு' (வழக்கமான வாக்குச்சாவடிக்கு அப்பால் இருந்து வாக்களித்தல்) முறையின் சவால்கள் குறித்து நான் ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பகிரப்பட்ட அந்த ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகள் தற்போதைய குழுவிற்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தொலைதூர வாக்களிப்பு பொறிமுறையும் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

முடிவுகளின் துல்லியம்: தகுதியுள்ள வாக்காளர்கள் மாத்திரம் வாக்களித்தல், அவர்கள் ஒருமுறை மாத்திரம் வாக்களிப்பதை உறுதி செய்தல் மற்றும் அனைத்து செல்லுபடியாகும் வாக்குகளும் எண்ணப்படுவதை உறுதி செய்தல்.

சரிபார்க்கும் திறன்: சம்பந்தப்பட்ட தரப்பினர் முடிவுகளைச் சரிபார்க்கக் கூடியதாக இருத்தல்.

வாக்கின் இரகசியத்தன்மை.

எவ்வாறாயினும், இந்தத் தொழில்நுட்ப விவாதங்களுக்கு அப்பால் ஒரு அடிப்படைப் பிரச்சினை உள்ளது. அதாவது, தாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களின் தீர்மானங்களால் ஏற்படும் நன்மைகளையோ அல்லது தீமைகளையோ அனுபவிக்காத வெளிநாட்டு வாழ் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டுமா? என்பதே அதுவாகும்.

செயற்பாட்டுப் பொறுப்புக்கூறல் (Skin in the Game)

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அல்லது வாக்காளர்கள் எடுக்கும் தீர்மானங்களின் விளைவாக நன்மைகளோ அல்லது தீமைகளோ ஏற்படலாம். சிறந்த ஜனநாயகச் சூழலில், அந்தத் தீர்மானத்தை எடுப்பவர்கள் அதன் இலாபத்தையும் நட்டத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால், பல சந்தர்ப்பங்களில் தீர்மானத்தை எடுப்பவர்கள் நன்மைகளை மாத்திரம் அனுபவித்துவிட்டு, நட்டங்களை அனுபவிப்பதில்லை. இதனை 'செயற்பாட்டுப் பொறுப்புக்கூறல் இல்லாமை' (having no skin in the game) என அழைக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 6.9 மில்லியன் வாக்குகளுடன் வெற்றி பெற்றபோது, இலங்கையில் வாழும் வாக்காளர்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் வாழும் பல இலங்கையர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். சிலர் வாக்களிப்பதற்காகவே இலங்கைக்கு வந்தனர்.

அவர் பதவியேற்றவுடன் மேற்கொண்ட வரிச்சலுகை தீர்மானத்தினால் நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. அதன் விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாழ்ந்த மக்கள் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

ஆயிரக்கணக்கான சிறு வணிகங்கள் அழிந்தன. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த உள்நாட்டு மக்கள் தமது தெரிவின் மோசமான விளைவுகளை அனுபவித்தனர். ஆனால், அவருக்கு வாக்களித்த வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அந்தத் துயரங்களை அனுபவிக்கவில்லை.

இலங்கையில் வசிப்பவர்களுக்கு இந்தச் 'செயற்பாட்டுப் பொறுப்புக்கூறல்' இருந்தது. கோட்டாபயவின் வரிச்சலுகையால் நாடு முன்னேறியிருந்தால் அதன் நன்மைகளை உள்நாட்டு மக்களே அனுபவித்திருப்பார்கள்; அது தோல்வியடைந்தபோது அதன் பாரிய நட்டத்தையும் வரிசைகளில் நின்றபடி அவர்களே அனுபவித்தனர்.

ஆனால், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு வருத்தம் என்பதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை. அவர்கள் அந்தப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு வாழ் பிரஜைகளின் வாக்குரிமை

இந்த 'செயற்பாட்டுப் பொறுப்புக்கூறல்' கொள்கையை நேரடியாகப் பயன்படுத்தினால், வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது பொருத்தமற்றதாக அமையும்.

வாக்காளர் பட்டியலில் பெயரைக் கொண்டுள்ள வெளிநாட்டு வாசிகள் விமானச் சீட்டு எடுத்து வந்து வாக்களிப்பதைத் தடுக்க முடியாது என்றாலும், அவர்களின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எவ்வாறாயினும், இதில் ஒரு விதிவிலக்கை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்து, குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

இந்தத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், அவர்களது குடும்பங்கள் இலங்கையிலேயே வாழ்கின்றன. அவர்கள் ஒப்பந்தம் முடிந்து மீண்டும் நாட்டுக்கே திரும்ப வேண்டும். உதாரணமாக, 2021-22 காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட செயற்கையான நாணய மாற்று விகிதக் கட்டுப்பாடு, இந்தத் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவதை நேரடியாகப் பாதித்தது.

எனவே, இவர்களுக்கு நாட்டின் தீர்மானங்களில் நேரடிப் பங்கு உண்டு. இவர்களை விசேட வாக்காளர் பட்டியலில் உள்வாங்கி, எஸ்தோனியா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல 'ஸ்மார்ட் கார்டு' மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்கச் செய்ய முடியும்.

வெளிநாடுகளில் உள்ள இத்தகைய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இணையத்தளம் மூலமான வாக்களிப்பே (Online Voting) மிகச் சிறந்த தீர்வாகும். தூதரகங்களில் வாக்குச்சாவடிகளை அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

உதாரணமாக, சவூதி அரேபியாவில் ரியாத்தில் உள்ள தூதரகத்திற்குச் செல்ல ஜித்தாவிலிருந்து 8 மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். மேலும், வெளிநாட்டுத் தேர்தலுக்காக விடுமுறை வழங்க வேண்டிய கட்டாயம் அந்த நாட்டுச் சட்டங்களில் இல்லை.

எனவே, வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியேறியவர்களை விடுத்து, தற்காலிகமாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத்திரம் இந்த வாய்ப்பை வழங்குவதே நீதியானதாகும்.

கட்டுரை: பேராசிரியர் ரோஹன் சமரஜீவ

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி