முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) அழைக்கப்பட்டு, நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட மேலும் இருவரால் கூட்டுக் கணக்காக முன்னெடுக்கப்பட்ட 'சிறிலிய சவிய' அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு ஊடாக நிதி மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஜனவரி 27 ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் சமூகமளிக்காத அவர் மற்றுமொரு தினத்தைக் கோரியிருந்தார். அதற்கமையவே கடந்த 3 ஆம் திகதி அவர் வாக்குமூலம் வழங்க வருகை தந்திருந்தார்.
அரசியல் ரீதியான தாக்கங்கள்
ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரண்டிருந்தனர். நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்கிலேயே பொதுஜன பெரமுனவினால் இக்கூட்டம் திரட்டப்பட்டதாக அரசாங்கத்திற்கு ஆதரவான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டது தொடர்பாக பொதுஜன பெரமுன அன்றைய தினமே விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த அறிக்கையில், 'சிறிலிய சவிய' அமைப்பின் கணக்கு அறிக்கைகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற விசாரணைகளின் போது நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் அவரை அழைத்து அதே விடயங்கள் குறித்து வினவியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'சிறிலிய சவிய' அமைப்பின் பின்னணி
அரச சார்பற்ற நிறுவனமாக (NGO) பதிவு செய்யப்பட்டிருந்த 'சிறிலிய சவிய' அறக்கட்டளை ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் செயற்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கி சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவுதல், தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்குதல் போன்ற நோக்கங்களுக்காகவே இது ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற 'நல்லாட்சி' அரசாங்க காலத்தில், இந்த அமைப்பின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து கிடைத்த உதவிகள் மற்றும் உள்நாட்டு நன்கொடைகள் முறையாகக் கையாளப்பட்டனவா என்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அமைப்பின் வசமிருந்த சில வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றுக்குப் பணம் வைப்பிலிடப்பட்ட விதம் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்படி, 2015 ஜூன் 01 ஆம் திகதி அன்றைய சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. 2015 முதல் தொடரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது இவ்வமைப்பின் செயற்பாடுகள் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
'Dummy' அடையாள அட்டை இலக்க சர்ச்சை
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தீவிர ஆதரவாளரான பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரணவினால் இந்தக் கணக்கு குறித்து வெளியிடப்பட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 'சிறிலிய சவிய' கணக்கை ஆரம்பிக்கச் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தனது கடவுச்சீட்டையே சமர்ப்பித்ததாகவும், அவரிடம் அப்போது தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "வங்கியின் கணினித் தரவு அமைப்பில் அடையாள அட்டை இலக்கத்திற்கான பகுதியை வெற்றிடமாக விட முடியாது என்பதால், வங்கி உத்தியோகத்தர் ஒருவரே தற்காலிகமாக 222222222V என்ற 'Dummy' இலக்கத்தை இட்டுள்ளார். இது இயற்கையாக எவருக்கும் வழங்கப்பட முடியாத ஒரு இலக்கமாகும். ஆனால், பிற்காலத்தில் இது ஒரு பாரிய மோசடி போலச் சித்தரிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த பத்திரண கூறுவது போல இது ஒரு 'Dummy' இலக்கமாக இருக்கலாம். எனினும், கடவுச்சீட்டிலேயே தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்னணியில், வங்கி உத்தியோகத்தர் ஏன் போலியான இலக்கத்தைப் பயன்படுத்தினார் என்பது கேள்விக்குறியே. எவ்வாறாயினும், கொழும்பு 10, மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் 2006 நவம்பர் 14 ஆம் திகதி 143-1-001-04-6235069 என்ற இலக்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இக்கணக்கு ஒரு சட்டப்பூர்வமான கணக்காகும்.
மாலிமா அரசாங்கத்தின் மீதான பொறுப்பு
ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களைப் போலவே, 'சிறிலிய சவிய' அமைப்பிலும் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. இதற்கிடையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கத்தின் பிரமுகர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய பாரிய பொறுப்பு 'மாலிமா' (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கத்திற்கு உள்ளது.
உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான பணம், துபாயிலுள்ள சொத்துக்கள், நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 13 லம்போகினி (Lamborghini) சொகுசு கார்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் நாயைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 360 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி போன்ற கதைகளை நாட்டு மக்கள் முன்னிலையில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய அரசாங்கம் உள்ளது.