குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறக்கத் தயார்; சுமந்திரனுக்கு சிறிதரன் சவால்!

குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறக்கத் தயார்; சுமந்திரனுக்கு சிறிதரன் சவால்!

கடந்த காலங்களில் இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கு ஆதரவாக தான் எட்டு தடவைகள் வாக்களித்ததாக

சுமந்திரன் முன்வைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயார் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டார். புதிய கணக்காய்வாளர் நாயகத்தை (Auditor General) நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக சிறிதரன் வாக்களித்ததாகக் கூறப்படும் விவகாரம் தற்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், சிறிதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே எட்டு சந்தர்ப்பங்களில் அவர் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு சிறிதரனிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மோதல்களின் பின்னணியில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து எஸ். சிறிதரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னைப் பதவியிலிருந்து நீக்கியமை அநீதியானது எனத் தெரிவித்துள்ள சிறிதரன், கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் கட்சியின் யாப்பை மீறி தன்னிச்சையாக இவ்வாறான முடிவுகளை எடுத்து வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறிதரனின் இந்த சவால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி