கனடா முழுவதும் கடுமையான குளிர், பலத்த காற்று, பனிப்பொழிவு, உறைபனி மழை, மற்றும் மூடுபனி என பல்பேறுபட்ட காலநிலை மாற்றங்கள் நிலவுமென ஞாயிற்றுக்கிழமைக்கான வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களத்தின் காலநிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ், இந்த மாரிகாலத்தில் நிலவும் இத்தகைய சீரற்ற காலநிலையானது மிகவும் கடுமையானது என வர்ணித்துள்ளார்.
“இது வெறும் குளிர் மட்டுமல்ல, அத்துடன் பனிப்பொழிவும் சேர்ந்தே காணப்படுகின்றது. பொதுவாக இவை இரண்டும் ஒன்றாகக் காணப்படுவது அரிது,” என அவர் தெரிவித்தார்.
டொராண்டோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் போன்ற நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வெப்பமான இலையுதிர்காலம் நிலவிய போதிலும், நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் வழமைக்கு மாறான கடும் குளிரே பதிவாகியுள்ளதாக பிலிப்ஸ் சுட்டிக்காட்டினார்.
கியூபெக் மற்றும் ஒன்டாரியோ
கனடா சுற்றுச்சூழல் திணைக்களத்தின் தகவல்படி, டொராண்டோ, ஒட்டாவா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் குளிருக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்றினால் ஏற்படக்கூடிய அதிகப்படியான குளிர் காரணமாகத் தோலில் பாதிப்புகள் (Frostbite) ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, டொராண்டோவில் -15°C மற்றும் ஒட்டாவாவில் -17°C வெப்பநிலையே நிலவியது. எனினும் பகல் வேளையில் சூரிய வெளிச்சம் காரணமாக இந்த வெப்பநிலையில் சற்று உயர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இன்று இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை சில பகுதிகளில் குளிரின் தாக்கம் -30°C முதல் -40°C வரை செல்லக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், குளிரினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, தசை வலி, உடல் சோர்வு, உணர்ச்சியற்ற நிலை, தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. பொதுமக்கள் பல அடுக்குகளைக் கொண்ட ஆடைகளை அணியுமாறும், காற்றைத் தாங்கக்கூடிய வெளி அங்கிகளை அணியுமாறும் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மேற்கு கனடா
வின்னிபெக், ரெஜினா மற்றும் சஸ்காட்செவன் மாகாணத்தின் மத்திய பகுதிகளில் கடும் மூடுபனி நிலவுவதால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "சில பகுதிகளில் பார்வைத் திறன் திடீரெனக் குறையக்கூடும் என்பதால் போக்குவரத்து அபாயகரமானதாக அமையலாம்" என எச்சரிக்கை குறிப்பு தெரிவிக்கின்றது.
சாஸ்கடூன் பகுதிகளில் உறைபனி மழை பெய்யக்கூடும் என்பதால், நடைபாதைகள் மற்றும் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும், இதனால் மக்கள் விபத்துக்களுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கனடாவில் கடும் குளிர் நிலவும் அதேவேளை, எட்மண்டன் மற்றும் கால்கரி போன்ற மேற்குப் பிராந்தியங்களில் இம்முறை வழமையை விட அதிக வெப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. வான்கூவர் மற்றும் விக்டோரியா பகுதிகளில் மிதமான காலநிலையுடன் பனி மற்றும் மழை கலந்த காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
அட்லாண்டிக் கனடா மற்றும் ஏனைய பிராந்தியங்கள்
செயிண்ட் ஜோன்ஸ் நகரின் வடமேற்குப் பகுதியில் 10 முதல் 20 சென்டிமீற்றர் வரை கனமான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என விசேட வானிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயரமான நிலப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாகவும், கடற்கரை ஓரங்களில் சற்று குறைவாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வைட்ஹோர்ஸ் (Whitehorse) பகுதியில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அங்கு வெப்பநிலை -35°C ஆகக் காணப்படும் போதிலும், காற்றின் வேகம் காரணமாக அது -50°C போன்ற உணர்வைத் தரும் என்பதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் காலம் இன்னும் முடியவில்லை
பெப்ரவரி கடைசி வாரத்தில் கனடா முழுவதும் மீண்டும் கடும் குளிர் நிலவும் என டேவிட் பிலிப்ஸ் எதிர்வு கூறியுள்ளார். "கடலோரம் முதல் கடலோரம் வரை நாடு முழுவதும் குளிர் வாட்டும். நாம் இன்னும் நீண்ட மாரிகாலத்தைக் கடக்க வேண்டியுள்ளது," என அவர் மேலும் குறிப்பிட்டார்.