'கிவுல் ஓயா திட்டம் மூலம் குடியேற்றங்கள் இல்லை!'

'கிவுல் ஓயா திட்டம் மூலம் குடியேற்றங்கள் இல்லை!'

கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து புதிய குடியேற்றங்களைக் கொண்டுவரப்போவதில்லை என்றும், இந்தத் திட்டத்துக்குள் தமிழர்களையும் உள்வாங்குவதே தமது இலக்காக உள்ளது என்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நேற்று(8) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

கடந்த காலகத்தில் ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

துரதிஷ்டவசமாக இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை அதனால் இந்தத் திட்டத்தை முன்நகர்த்த முடியவில்லை.

இந்தத் திட்டம் கொழும்பில் இருந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் காணப்படுகின்றன.

1983ஆம் ஆண்டிலிருந்து நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான அச்சம் ஏற்படுவது இயல்பானது.

ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் நீர்ப்பாசனத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள், அங்கு வாழ முடியாது வெளியேறிவிட்டார்கள் என்பதுதான் யாதார்த்தமாகும்.

அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நீர் வசதிகள் இல்லாமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

தற்போது கரைத்துறைப்பற்று, வவுனியா வடக்கு போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் விவசாயம் செய்கின்றார்கள். அதேபோன்று ஜனக்கபுர உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் விவசாயம் செய்கின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களையும் உள்ளீர்த்து நாம் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இந்தத் திட்டத்தின் ஊடாக எவ்விதமான குடியேற்றங்களும் செய்யப்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி