இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி!

இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி!

இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ளுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டமிட்டபடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியை புறக்கணிக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார். அக்கோரிக்கைக்கு இணங்கவே பாகிஸ்தான் அரசாங்கம் தனது முந்தைய தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை பயங்கரவாதத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், பாகிஸ்தான் எவ்வாறு இலங்கை கிரிக்கெட் துறைக்கு ஆதரவளித்தது என்பதை இதன்போது ஜனாதிபதி அந்நாட்டு பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது 'X' (முன்னைய ட்விட்டர்) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், உலகக்கிண்ணத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தமைக்காக பாகிஸ்தான் பிரதமருக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி