போலிப் புன்னகைக்கு பின்னால் மறைந்திருக்கும் தந்திரம்!

போலிப் புன்னகைக்கு பின்னால் மறைந்திருக்கும் தந்திரம்!

பொலிஸ்காரன், கொள்ளைக்காரன் இருவருமே ஆயுதங்கள் வைத்திருந்தாலும் இருவரையும் சட்டவிரோத ஆயுததாரிகள் என்று கையாள முடியுமா? முடியாதல்லவா? இருவரையுமே சட்டவிரோத ஆயுததாரிகளாக விமர்சனம் செய்தால் அது எப்படி இருக்குமோ அப்படி ஒரு விடயத்தை முன்வைக்கின்றார் இலங்கை யின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

தங்களுடைய இருப்புக்கான - இனத்தின் கௌரவத்திற்கான - வாழ்வியல் உரித்துகளுக்காக - அடிப்படை உரிமைகளுக்காக - தமிழினம் போராடுவதையும் 'இனவாதம்' என்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க. அதேவேளை தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அவர்கள் மீது பௌத்த - சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தை செலுத்த விரும்பும் பேரின வெறியர்களையும் இனவாதிகள் என்கிறார் அவர்.

உரித்துக்காகப் போராடும் தமிழர்களையும், அவர்களை அடக்கி ஆளமுனையும் பேரினத்தவர்களையும் ஒரே தராசில் 'இனவாதிகள்' என்று விமர்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்ககவின் அணுகுமுறை இலங்கைத் தீவில் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவலப்பட்டு, அல்லற்பட்டு, அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திற்கு நீதியைத் தேடி தராது என்பது நிச்சயமானது.

பாதிக்கப்பட்ட தரப்பின்பால் பரிவும், அடக்கு முறையைத் தூண்டிவிடும் தரப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுப்பதுதான் நீதி செய்யும் மாண்பு. ஆனால் தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக பாதிக்கப்பட்ட தரப்பையும் பாதிப்பை ஏற்படுத்தும் தரப்பையும் ஒன்று போல கருதி தத்துவம் பேசுகிறார் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க.

'நாட்டை ஒன்றிணைப்பதற்கு இரு குழுக்கள் தடையாகவுள்ளன. ஒரு தரப்பினர் - வடக்கில் இருக்கும் தமிழ் இனவாதிகள். மற்றைய தரப்பினர் - தென் பகுதியிலுள்ள சிங்கள இனவாதிகள். இவர்கள் வடக்கில் இருக்கும் விகாரைக்குச் சென்று போயா தினத்தில் விகாரையை அகற்றுமாறு கூச்சலிடுகின்றனர்.

'அதற்குச் சமமாக தென்பகுதி இனவாதிகள் அதே விகாரைக்குப் போயா தினத்தில் செல்வது குழப்பதை ஏற்படுத்துவதற்கே தவிர வேறு ஒன்றுக்குமில்லை' என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இரண்டொரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் தங்களுக்கு எதிராகப் பேரினவாதம் வரிந்து கட்டிக்கொண்டு அடக்குமுறை நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கின்றது என்பது தமிழர்களின் குற்றச்சாட்டு. அதுவே ஆதங்கம். எரிச்சல். எல்லாமுமே.

அந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி செய்யும் முதுகுத்திராணி - நேர்மையான ஆட்சிக்கான திடசங்கற்பம் - உண்மை மீது பற்றுறுதி - ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு அறவே இல்லை.  அதனால் அடக்கப்பட்ட இனத்தின் அவலக் குரலையும் அடக்கும் இனத்தின் அட்டூழிய கர்ச்சனையையும் ஒன்றாக - சமமாக - அவர் கருதி கருத்து வெளியிடுகிறார்.

இத்தகைய ஒரு தலைவரால் இலங்கையின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு நீதி, நியாயமான - நின்று, நிலைத்து நீடிக்கக்கூடிய - ஒரு கௌரவமான தீர்வை தரவே முடியாது என்பதுதான் அவரது அணுகு முறையில் இருந்து வெளிப்படுகின்றது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி