கட்சி மாநாட்டு வாக்களிப்பு கருவிகள் மாயம்: பாரிய நிதி இழப்பை எதிர்கொள்ளும் கட்சி!

கட்சி மாநாட்டு வாக்களிப்பு கருவிகள் மாயம்: பாரிய நிதி இழப்பை எதிர்கொள்ளும் கட்சி!

கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டின் போது வழங்கப்பட்ட பெறுமதிமிக்க வாக்களிப்பு கருவிகள் சில மாயமாகியுள்ள நிலையில், அவற்றை வைத்திருக்கும் பிரதிநிதிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்குமாறு அக்கட்சியின் ஏற்பாட்டாளர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், எதிர்பாராத பாரிய நிதிச் சுமையை கட்சி எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் வெய்ன் பென்சன் (Wayne Benson), கடந்த வாரம் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை மாற்றங்கள் குறித்த வாக்களிப்பிற்காக வழங்கப்பட்ட 'கீபேட்' (Keypad) கருவிகள் மற்றும் 'ஸ்மார்ட் கார்டுகள்' (Smart Cards) பல, கல்கரியில் நடைபெற்ற மாநாடு நிறைவடைந்த பின்னரும் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சுமார் 1,000 டொலர் பெறுமதியுடைய 'LUMI Connector Keypads' மற்றும் சனிக்கிழமை அமர்வுகளில் பயன்படுத்தப்பட்ட 220 இற்கும் மேற்பட்ட 'ஸ்மார்ட் கார்டுகளை' கண்டறிய உங்கள் உதவியை நாடுகிறோம்" என பென்சன் அந்த மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய 'பிளாக்பெரி' (Blackberry) கையடக்கத் தொலைபேசிகளைப் போன்ற தோற்றமுடைய இந்தக் கருவிகள், கட்சியின் கொள்கை மாற்றங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், அந்தந்த மாகாணப் பிரதிநிதிகளை அடையாளம் காண்பதற்காக அழைப்பு அட்டைகளை (Calling card) ஒத்த ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

சுமார் 2,700 கருவிகள் இவ்வாக்கெடுப்பிற்காக பயன்படுத்தப்பட்டன. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட 'Lumi Global' என்ற நிறுவனத்திடமிருந்து இவை வாடகைக்கு பெறப்பட்டிருந்தன. காணாமல்போன இந்தக் கருவிகள் மீள ஒப்படைக்கப்படாவிட்டால், அவற்றுக்கான நட்டஈட்டை கன்சர்வேட்டிவ் கட்சியே செலுத்த வேண்டியிருக்கும்.

"இவை மாநாடு முடிந்தவுடன் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும், இவற்றை நினைவுச் சின்னங்களாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. இந்தக் கருவிகளின் இழப்பீட்டுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறானதொரு பாரிய நட்டத்தை நாம் வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கவில்லை," என பென்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

அறியாமலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்தக் கருவிகளை எடுத்துச் சென்றவர்களிடமிருந்து அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது குறித்து கட்சியின் ஊடகப் பேச்சாளர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) மீதான தலைமைத்துவ மதிப்பீட்டு வாக்கெடுப்பிற்கு இந்த இலத்திரனியல் கருவிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது பொதுத்தேர்தல் போன்றே காகித வாக்குச் சீட்டுகள் மூலம் நடாத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 87 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவைப் பெற்று பொய்லிவ்ரே தனது தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.