"அதிகரித்து வரும் செயற்பாட்டு அழுத்தம்" காரணமாக, ரொறன்ரோ - ஒட்டாவா - மொன்றியல் ஆகிய நகரங்களுக்கு இடையிலான பல புகையிரத சேவைகளை இரத்து செய்துள்ளதாக 'வியா ரெயில்' (Via Rail) நிறுவனம் அறிவித்துள்ளது.
ரொறன்ரோ முதல் ஒட்டாவா வரையிலும், மொன்றியல் முதல் ஒட்டாவா வரையிலும் இயக்கப்படும் பல புகையிரதங்கள் திங்கட்கிழமை முழுமையாக இரத்து செய்யப்பட்டன. "செயற்பாட்டுக் கட்டுப்பாடுகள்" (Operational constraints) காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நேரடித் தகவல் தளம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்களைக் கோரியபோது, நேர்காணல் வழங்க மறுத்த குறித்த மத்திய அரச நிறுவனம், எதிர்வரும் சவாலான காலப்பகுதியில் சேவையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கையே இதுவென மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளது.
இந்த வாரம் எதிர்பார்க்கப்படும் மோசமான காலநிலை மற்றும் ஒன்ராறியோவில் வரவிருக்கும் 'குடும்ப தின' (Family Day) வார இறுதியை முன்னிட்டு அதிகரிக்கவுள்ள பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மேலதிக புகையிரதங்களை கையிருப்பில் வைப்பதற்காகவே இந்த தற்காலிக சேவை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வியா ரெயில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நீண்டநேர தாமதங்களைக் குறைக்க முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள 'டிரான்ஸ்போர்ட் ஆக்ஷன் கனடா' (Transport Action Canada) அமைப்பின் தலைவர் டெர்ரி ஜோன்சன், கடைசி நேர இரத்துகளைத் தவிர்ப்பதற்காகவே வியா ரெயில் சில புகையிரதங்களை மேலதிக கையிருப்பில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். "விளையாட்டுத் துறையில் கூறுவதைப் போல, மேலதிக வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பதன் மூலம் போட்டியை வெற்றிகரமாக முடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்," என அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக பல கடைசி நேர இரத்துகளை வியா ரெயில் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றக் குழு முன்னிலையில் விசாரணை
இந்த சேவை இரத்துகள் முக்கியமானதொரு காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல், வியா ரெயில் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான நிலையியற் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர்.
"வியா ரெயிலின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தல்" என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறிப்பாக, இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவிற்கு இடையில் பிரொக்வில் (Brockville) பகுதியில் பயணிகள் இரவு முழுவதும் புகையிரதத்தில் சிக்கியிருந்த சம்பவம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
"புகையிரதப் பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதில் அந்நிறுவனம் அதிக முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என நாம் அறிவுறுத்தியுள்ளோம்" என போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த சேவை இரத்துகளினால் பயணிகளுக்கும் சமூகங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தாம் உணர்ந்துள்ளதாக வியா ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் எவ்வித மேலதிகக் கட்டணமுமின்றி மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அல்லது முழுமையான பணம் மீள வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.