கியூபெக் அரசாங்கம் தனது புகழ்பெற்ற 'PEQ' (Programme de l'expérience québécoise) குடிவரவுத் திட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகக் கட்டுப்பாடுகள் நிறைந்த புதிய 'PSTQ' (Skilled Worker Selection program) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
மாகாணத்திற்கு அவசியமான தொழிலாளர்களை இலக்கு வைப்பதற்கே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஜோன்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge) தெரிவித்துள்ளார்.
எனினும், குடிவரவு நிபுணர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் இதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த மாற்றத்தைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை ஏழு நகரங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
PEQ திட்டம் என்றால் என்ன?
கியூபெக்கில் நிரந்தர வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான 'தேர்வுச் சான்றிதழை' (Selection certificate) பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக PEQ திட்டம் காணப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க:
சர்வதேச மாணவர்கள் அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கியூபெக்கில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
உயர்தர பிரெஞ்சு மொழிப் புலமை அவசியமானது.
விண்ணப்பதாரிகளின் துணைவியாரும் தமது பிரெஞ்சு மொழி அறிவை நிரூபிக்க வேண்டும்.
இந்தத் திட்டம் மிகவும் தெளிவானது என்பதால், விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தின் முடிவை முன்கூட்டியே கணிக்க முடிந்தது என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய PSTQ திட்டத்தில் முன்னுரிமை பெறுபவர்கள் யார்?
புதிய முறைமையின் கீழ், விண்ணப்பதாரிகள் 'Arrima' என்ற இணையத்தளம் ஊடாக தமது விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அரசாங்கத்தின் முன்னுரிமைத் தேவைகளுக்கு ஏற்ப, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அழைப்புக்கள் விடுக்கப்படும்.
தற்போதைய நிலையில், மொன்றியல் மற்றும் லாவால் (Laval) ஆகிய நகரங்களுக்கு வெளியே உள்ள பிராந்தியங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத் துறை, கல்வி மற்றும் கட்டுமானத் துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகளுக்கான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த முன்னுரிமை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோபெர்ஜ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
கியூபெக்கில் சுமார் 6,300 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களது பணி அனுமதிப்பத்திரம் (Work permit) 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் காலாவதியாகவுள்ளது. இவர்களில் அரைவாசிப் பேர் மொன்றியல் நகரிலேயே பணிபுரிகின்றனர்.
PEQ திட்டம் நிறுத்தப்பட்டமையால், இந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை மாகாணம் இழக்க நேரிடும் என்றும், இதனால் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. எனினும், இந்த ஆண்டிற்குள் குறித்த சுகாதாரப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு
வேலை அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்திய அரசாங்கமே காரணம் என மாகாண அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், மொன்றியல் மற்றும் லாவால் பகுதிகளில் 72,000 டொலருக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களின் வேலை அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதில் கியூபெக் மாகாண அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளே இந்த நெருக்கடிக்குக் காரணம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து கனேடிய மத்திய குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பொருளாதாரக் குடிவரவாளர்களைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கியூபெக் மாகாணத்திற்கே உரியது எனவும், மாகாணத் தெரிவுச் சான்றிதழ் உள்ளவர்கள் தமது வேலை அனுமதிப்பத்திரத்தை நீடிக்க விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.