கனடா - அமெரிக்கா முறுகல் நிலை: கோர்டி ஹோவ் பாலம் தொடர்பான உண்மை விளக்கம்!

கனடா - அமெரிக்கா முறுகல் நிலை: கோர்டி ஹோவ் பாலம் தொடர்பான உண்மை விளக்கம்!

வின்சர் மற்றும் டெட்ராய்ட் நகரங்களை இணைக்கும் கோர்டி ஹோவ் (Gordie Howe) சர்வதேச பாலத்தைத் திறக்கவிடாமல் தடுப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலத்தின் முழுச் செலவையும் கனடியர்களே ஏற்றுக் கொண்டதையும், இதன் உரிமையில் அமெரிக்காவுக்கும் ஏற்கனவே பங்கு இருப்பதையும் தாம் அவருக்குத் தெளிவுபடுத்தியதாக கார்னி குறிப்பிட்டார்.

இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக கனடிய மத்திய அரசு சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக கார்னி ட்ரம்பிடம் எடுத்துரைத்தார்.

"அமெரிக்கப் பொருட்கள் எதுவுமே கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவில்லை" என ட்ரம்ப் கூறிவரும் போலிக்குற்றச்சாட்டுகளை மறுத்த கார்னி, இரு நாடுகளையும் சேர்ந்த உருக்கு (steel) மற்றும் தொழிலாளர்களே இதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

பாலத்தின் இரு பக்கங்களும் கனடாவுக்கே சொந்தம் என ட்ரம்ப் கூறிவந்த போதிலும், உண்மையில் இந்தப் பாலம் கனடா மற்றும் மிச்சிகன் (Michigan) மாநிலத்திற்குப் பொதுவான சொத்தாகும். 2012-இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஆரம்பக் கட்டுமானச் செலவுகள் அனைத்தையும் கனடா ஏற்றுக் கொண்டாலும், இதன் உரிமை இரு நாடுகளுக்கும் கூட்டாகவே வழங்கப்பட்டுள்ளது.

பாலத்தை இயக்குவதற்குப் பொறுப்பான 'வின்சர்-டெட்ராய்ட் பால அதிகாரசபை' (WDBA) ஒரு கனடிய அரச நிறுவனமாகும் (Crown corporation). அதேவேளை, கனடா மற்றும் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த சரிசமமான பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சர்வதேச அதிகாரசபை இதன் மேற்பார்வை நடவடிக்கைகளைக் கவனிக்கும்.

செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் (Parliament Hill) செய்தியாளர்களிடம் பேசிய கார்னி, "இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தப் பாலம் திறக்கப்படுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, இதன் ஊடாக இடம்பெறவுள்ள வர்த்தகம், சுற்றுலா மற்றும் கனடிய-அமெரிக்கப் பயணிகளின் போக்குவரத்து என்பன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை" என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி