கனடாவில் HIV பரிசோதனையில் புதிய மைல்கல்: இனி வீட்டிலிருந்தே பரிசோதிக்கலாம்!

கனடாவில் HIV பரிசோதனையில் புதிய மைல்கல்: இனி வீட்டிலிருந்தே பரிசோதிக்கலாம்!

கனடாவில் வசிப்பவர்கள் இனி இரத்தம் எடுக்கத் தேவையில்லாமல், மிகவும் இலகுவான முறையில் வீட்டிலிருந்தே எச்.ஐ.வி பரிசோதனையைச் செய்துகொள்ள ஹெல்த் கனடா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் 'OraSure Technologies' நிறுவனத்தின் OraQuick எனும் வாயூடாகச் செய்யப்படும் சுய-பரிசோதனை கருவிக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது எப்படிச் செயற்படுகிறது?

இந்தப் பரிசோதனைக் கருவியானது ஒரு சிறிய குச்சி போன்ற அமைப்பைக் கொண்டது. இதன் நுனியில் உள்ள தட்டையான பகுதியை மேல் மற்றும் கீழ் ஈறுகளில் (Gums) தடவி உமிழ்நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பிளாஸ்டிக் குப்பியில் இட்டு வைத்தால், வெறும் 20 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்பகாலப் பரிசோதனை அல்லது கோவிட் (COVID-19) பரிசோதனையைப் போலவே, இதில் ஒரு கோடு வந்தால் 'நெகட்டிவ்' (தொற்று இல்லை) என்றும், இரண்டு கோடுகள் வந்தால் 'பொசிட்டிவ்' (தொற்று இருக்கலாம்) என்றும் அர்த்தம்.

யார் இதனை விநியோகிக்கிறார்கள்?

டொராண்டோவில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் (St. Michael’s) வைத்தியசாலையின் 'MAP நகர்ப்புற சுகாதார தீர்வுகள் மையம்' இதன் பிரத்தியேக விநியோகஸ்தராகச் செயற்படும். இதற்கான இணையவழி முன்பதிவுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. ஒரு கருவியின் விலை 15 முதல் 20 டொலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் தற்போதைய எச்.ஐ.வி நிலைவரம் (புள்ளிவிபரங்களுடன்):

கனடாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது:

2022: 1,800 புதிய தொற்றாளர்கள்.

2023: 2,434 ஆக அதிகரித்தது.

2024: 1,826 ஆகக் குறைந்தது.

தேசிய ரீதியில் 100,000 பேருக்கு 5.7 பேர் என்ற வீதத்தில் தொற்று உள்ள போதிலும், மானிட்டோபா (19.5) மற்றும் சஸ்காச்சுவான் (18.6) ஆகிய மாகாணங்களில் இந்த வீதம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 7,000 கனடியர்கள் தமக்குத் தொற்று இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள்:

இந்த இலகுவான பரிசோதனை முறை பின்வரும் தரப்பினருக்குப் பெரிதும் உதவும் என வைத்தியர் சீன் ரூர்க் (Dr. Sean Rourke) தெரிவித்துள்ளார்:

இன ரீதியான சிறுபான்மையினர் (Racialized communities): குறிப்பாக கறுப்பினத்தவர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் பாதிப்பு வீதம் அதிகம்.

ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்.

ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோர்.

முக்கிய குறிப்பு:

இந்த 'ஒராகுவிக்' (OraQuick) பரிசோதனை முறையானது தொற்று ஏற்பட்டு 23 முதல் 90 நாட்களுக்குப் பின்னரே துல்லியமாகத் தொற்றைக் கண்டறியும். ஒருவேளை இதில் 'பொசிட்டிவ்' என முடிவு வந்தால், அதனை உறுதிப்படுத்த உடனடியாக ஒரு இரத்தப் பரிசோதனையை (Laboratory blood test) செய்துகொள்வது அவசியமாகும்.

இரத்தம் எடுக்கப் பயப்படுபவர்களுக்கும், வைத்தியசாலைக்குச் செல்லத் தயங்குபவர்களுக்கும் இந்த வீட்டுப் பரிசோதனை முறை ஒரு வரப்பிரசாதமாகும்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி