'கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் குடிதண்ணீர் மற்றும் விவசாயத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடனேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இதனை அரசியல் மயப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம்' இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிபபிடுகையில்,
'முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீண்டகால நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாகவே கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தற்போதைய அரசால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல.
'கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவையால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மகாவலி 'எல்' வலயத்துக்கு உட்பட்ட இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய அப்போது திட்டமிடப்பட்டிருந்தது.
'எனினும், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இது பாதியில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்ட ஒரு திட்டத்தையே நாம் தற்போது மீள ஆரம்பிக்கின்றோம்' என்றார்.
'இந்தத் திட்டத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து விளக்கிய அமைச்சர், '2011ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்காக 4 ஆயிரத்து 170 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் இதன் செலவு 23 ஆயிரத்து 456 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
'ஆரம்ப மதிப்பீட்டை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ள போதிலும், மக்களின் நலன் கருதி தேசிய நிதியத்தின் ஊடாக 2026 முதல் 2031ஆம் ஆண்டுக்குள் இதனை நிறைவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
'இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே, இதனை அரசியல்
மயப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம். மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் அரசுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது' என்றார்.