'அநுர அரசும் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறது!'

'அநுர அரசும் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறது!'

உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போராடியவர்கள். எனவே வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என வடக்கு - கிழக்கு வலிந்து

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கப் புதிய நிர்வாகத் தெரிவு செவ்வாய்க் கிழமை காலை மன்னார் நகர மண்ட பத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாகத்தில் தலைவராக மீண்டும் உதயச்சந்திரா தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக லுஸ்ரின் மோகன்ராஜ். உப தலைவராக திருமதி ரஞ்சினி, உப செயலாளராக வேணி, பொருளாளராக இமாக்குலேற் ஆகியோருடன் நிர்வாக உறுப்பினர்கள் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு எமது உறவுகளை கையில் ஒப்படைக்கப்பட்டும், சரணடைந்தும், இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தும் கடத்திச் செல்லப்பட்டும் இருந்தனர். அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இந்த இலங்கை நாட்டில், அரசுகள் ஆட்சிக்கு வந்து கொண்டு இருக்கின்ற போதும், இந்த ஒரு விடயத்துக்குத் தீர்வும் கிடைக்காமல், நாங்கள் இன்று 16 வருடங்களைக் கடந்து தொடர்ந்தும் எம் உறவுகளுக்காக போராடி வருகின்றோம்.

எமது உறவுகள் எங்கே என்று கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால் அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று பதில் கூற முடியாத அரசு அவர்களை நம்பி சரணடைந்த அல்லது கையில் ஒப்படைத்த எமது உறவுகளை என்ன செய்தார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து எமது மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது. தற்போது போராட்டக்குழுவில் இருந்து வந்துள்ள அநுர அரசும் இன்று போலி நாடகம் ஆடி வருகிறது. அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி தெரியும் என்று கூறி இருந்தனர்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் உள்ளார். எமது உறவுகளை அழித்ததே இந்த இராணுவம்தான். ஒரு நாட்டில் இரண்டு இனம் வாழ்கின்ற போது ஓர் இனத்தை அழித்து, மற்றைய இனம் தெற்கிலே

வெற்றி விழா கொண்டாடியுள்ளது.

நாங்கள் இந்த நாட்டிலே மனிதர்களாக வாழ்வதற்கு உரிமை இல்லையா. நாமும் ஒரு தேசிய இனம். 30 வருடங்களாக எமது இளைஞர், யுவதிகள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எமது உரிமைகள் அப்போது மறுக்கப் பட்டிருந்தன. எமது உரிமைகளுக்காக அவர்கள் போராடியவர்கள்.

உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது.

உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அலர். அவர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லவில்லை. அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போராடியவர்கள். எனவே வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி