தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று வித்தை; அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும்!

தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று வித்தை; அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புத் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்றவை எனவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இதில் இல்லையெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பள உயர்வு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜீவன் தொண்டமான், அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துப் பாரிய சந்தேகங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டார். "நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். சம்பள உயர்வை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதனை எதிர்ப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானது" என அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் கடந்த 20 வருடங்களாக நட்டமடைந்து வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்தார்.

"இருபது வருடங்களாக ஒரு நிறுவனம் நட்டமடைகிறது என்றால், அவர்கள் ஏன் இன்னும் தோட்டங்களை வைத்திருக்கிறார்கள்? அவர்கள் தர்ம ஸ்தாபனம் நடத்தவில்லையே. நட்டமடையும் நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் மானியமாக வழங்குவது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் 2,138 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதாகப் போலி வாக்குறுதி அளித்ததாக அவர் குற்றம் சுமத்தினார்.

"நாங்கள் 1,700 ரூபாவை முன்மொழிந்தபோது, அதனை நிராகரித்த அரசாங்கம் 2,138 ரூபா வேண்டும் என்றது. அன்று பணவீக்கம் 1.5 வீதமாக இருந்தது. தற்போது பணவீக்கம் 3 முதல் 5 வீதமாக அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு 2,138 ரூபா அவசியமில்லை என அரசாங்கம் கருதுகிறதா?" என அவர் வினவினார்.

அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்ட ரீதியாகச் செல்லுபடியற்றது என அதில் ஒரு சரத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சட்ட வலுவற்ற ஒரு ஒப்பந்தத்திற்காக ஏன் பொதுப்பணத்தைச் செலவிட்டு விளம்பரங்களும் விழாக்களும் நடத்தப்படுகின்றன என அவர் கேட்டார்.

சம்பளத்தை உயர்த்திவிட்டு, சில தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் அளவை (Quota) 20 கிலோவிலிருந்து 26 கிலோவாக அதிகரித்துள்ளனர். இது உண்மையான சம்பள உயர்வு அல்ல, தொழிலாளர்களைச் சுரண்டும் செயல்.

இந்தச் சம்பள அதிகரிப்பை அமுல்படுத்துவதற்குத் தொழிலாளர் அமைச்சின் ஊடாக முறையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் நிறுவனங்களைப் பொறுப்புக்கூறச் செய்ய முடியும்.

பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கு வருடத்தில் 180 நாட்கள் வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். பல தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாமல் வேலைக்கு அமர்த்தப்படுவதால் அவர்களுக்கு EPF, ETF மற்றும் மகப்பேறு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும் ஜீவன் தொண்டமான் இதன்போது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி