டம்பளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: கனடிய தேசிய கொடிகளை 7 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட மார்க் கார்னி உத்தரவு!

டம்பளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: கனடிய தேசிய கொடிகளை 7 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட மார்க் கார்னி உத்தரவு!

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

"தேசமே துயரமடைந்துள்ளது"

புதன்கிழமை காலை லிபரல் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, இது தேசத்திற்கு ஒரு கடினமான நாள் எனத் தெரிவித்தார்.

"இன்று காலை பல பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் மற்றும் உறவினர்கள் தங்களுக்குப் பிரியமானவர்கள் இன்றி கண்விழித்துள்ளனர். இந்தத் துயரமான வேளையில் முழு தேசமும் உங்களுடன் இணைந்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்வதுடன், கனடா உங்களுக்குத் துணையாக நிற்கும்." என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மாகாண அரசாங்கத்திற்குத் பூரண ஆதரவு:

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபியுடன் (David Eby) தான் பேசியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசாங்கம் தடையின்றி வழங்கும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

அத்துடன், இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரிதமாகச் செயற்பட்ட அவசர கால மீட்புப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பொது ஆளுநர் மேரி சைமன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ் ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

"முழு தேசமும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறது" - பொது ஆளுநர்

இச்சம்பவம் குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொது ஆளுநர் மேரி சைமன் (Mary Simon), கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"இந்தத் துயரமான தருணத்தில், முழு கனடாவின் சிந்தனைகளும் டம்பளர் ரிட்ஜ் மக்களை நோக்கியே காணப்படுகின்றன. நாம் அனைவரும் இன்று ஒருமித்த கருணையுடன் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் பரிமாறிக்கொள்வோம். முழு தேசமும் உங்களுடன் இணைந்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறது." என அவர் தெரிவித்துள்ளார்.

"பெற்றோரின் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது" - பியர் பொய்லிவ்

இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ் (Pierre Poilievre), இந்தத் துப்பாக்கிச் சூட்டை ஒரு "அர்த்தமற்ற வன்முறைச் செயல்" என வன்மையாகக் கண்டித்துள்ளார்.

புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்:

"பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பெற்றுக்கொண்ட அந்தத் தொலைபேசி அழைப்புகளையும், அவர்கள் தற்போது அனுபவிக்கும் நரக வேதனையையும் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அனைத்து கனடியர்களும் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டிய தருணம் இதுவாகும். எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்காகப் பிரதமர் மற்றும் ஏனைய கட்சிகளுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம்." எனக் குறிப்பிட்டார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி