கனடா மீதான ட்ரம்ப்பின் வரிக் கொள்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!

கனடா மீதான ட்ரம்ப்பின் வரிக் கொள்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!

கனடியப் பொருட்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரிகளை நீக்குவதற்கான தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இன்று (11) நடைபெறவுள்ளது.

இந்த வர்த்தகப் போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதி, ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கத் தயாராகி வருவதால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த 2025 பெப்ரவரி மாதம், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கனடா தவறிவிட்டதாகக் கூறி, ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு 'தேசிய அவசரகால நிலையை' பிரகடனப்படுத்தினார். இதன் ஊடாகவே கனடியப் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்பட்டது.

நியூயோர்க் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி கிரிகோரி மீக்ஸ் (Gregory Meeks) கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம், குறித்த அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யக் கோருகிறது.

"கனடா ஒரு அச்சுறுத்தல் அல்ல, அது எமது நண்பன் மற்றும் நேச நாடு. இங்குள்ள ஒரே அவசர நிலை டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளால் உருவான பொருளாதார நெருக்கடியே" என கிரிகோரி மீக்ஸ் சபையில் காரசாரமாகத் தெரிவித்தார்.

இந்த வாக்கெடுப்பைத் தடுப்பதற்குச் சபாநாயகர் மைக் ஜோன்சன் (Mike Johnson) மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேக்கன் (Don Bacon), கெவின் கைலி (Kevin Kiley) மற்றும் தோமஸ் மாஸி (Thomas Massie) ஆகிய மூன்று உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததால், இன்று இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

"வரிகள் ஒரு தேறிய மறை பெறுமானத்தையே (Net Negative) பொருளாதாரத்திற்குத் தருகின்றன. இது அமெரிக்க நுகர்வோர் மற்றும் விவசாயிகள் மீது சுமத்தப்பட்ட பாரிய சுமையாகும்" என நெப்ராஸ்கா பிரதிநிதி டொன் பேக்கன் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையிலும், பின்னர் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டாலும், ஜனாதிபதி ட்ரம்ப் அதனை தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது, ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் பொருளாதாரக் கொள்கைக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, இந்த வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பான தீர்ப்பு வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி