எரிபொருள் தட்டுப்பாட்டினால் முடங்கியது கியூபா; இருளில் மூழ்கும் மக்கள்: மனிதாபிமான நெருக்கடி தீவிரம்!

எரிபொருள் தட்டுப்பாட்டினால் முடங்கியது கியூபா; இருளில் மூழ்கும் மக்கள்: மனிதாபிமான நெருக்கடி தீவிரம்!

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தடை காரணமாக கியூபா மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.

மின்சாரம் மற்றும் உணவின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூபாவின் பிரதான நட்பு நாடான வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் மற்றும் தடையுத்தரவுகள் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் கியூபாவிற்கான மசகு எண்ணெய் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கியூபாவின் சி ego de Avila பகுதியில் வசிக்கும் இஸ்பென் பெரால்டா (Isben Peralta) எனும் வர்த்தகர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

"நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை மனிதாபிமானமற்றது. சில பகுதிகளில் 11 மணிநேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எமது சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பலருக்கு உண்பதற்குக் கூட உணவில்லை. நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது." எனத் தெரிவித்தார்.

ஹவானாவிலுள்ள ஜோஸ் மார்டி சர்வதேச விமான நிலையத்தில் (Havana’s José Martí International Airport) விமான எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கனடாவின் பிரதான விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. அங்குள்ள சுற்றுலாப் பயணிகளைத் தற்காலிகமாகத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி பிறப்பித்த விசேட நிறைவேற்று உத்தரவின் மூலம், கியூபாவிற்கு எரிபொருள் விற்பனை செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.

கியூபாவின் மின் உற்பத்தி மற்றும் விமான சேவைகளை முடக்கி, அரசாங்கத்தைச் செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இது குறித்து கியூபாவிற்கான முன்னாள் கனடியத் தூதுவர் மார்க் என்ட்விஸ்டில் (Mark Entwistle) கருத்துத் தெரிவிக்கையில்:

"ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவின் பொருளாதாரத்தை முற்றாக நசுக்கி, அந்த ஆட்சியை வீழ்த்த முயல்கிறது. கோவிட் பெருந்தொற்றின் பின்னரான பொருளாதார வீழ்ச்சியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், இந்தத் தடைகள் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும்." எனச் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து முடக்கம் மற்றும் மின்சாரத் தடையினால் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியாமலும், தொலைபேசி தொடர்புகளைப் பயன்படுத்த முடியாமலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கனடாவில் வசிக்கும் கியூப வம்சாவளியினர், தமது உறவினர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மருந்துத் தட்டுப்பாடு, சுத்தமான குடிநீர் இன்மை மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக கியூபா தற்போது ஒரு பாரிய அழிவின் விளிம்பில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.