யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில், 17 வயதான அல் னோ அருள் பயாஸ் என்ற சிறுவன்
உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது, சிறுவனைச் சுட்டுக்கொலை செய்த பொலிஸாரை
உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சடலத்துடன் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சடலத்தை அடக்கம் செய்வதற்காகச் சங்கரத்தை சந்தி ஊடாகக் கொண்டு சென்றபோது, அங்கு பெருமளவிலான வட்டுக்கோட்டை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த உறவினர்கள், 'எங்களையும் சுடுங்கள், எங்கள் பிள்ளையை நாசமாக்கி விட்டீர்களே' எனக் கதறியழுதவாறு பொலிஸாரை நோக்கிச் சென்றனர்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பொலிஸார் மீது மண்ணை அள்ளி வீசியும், அவர்களைத் தள்ளிவிட்டும் உறவினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர், ஏனைய உறவினர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.