அது மிகவும் அமைதியாகவே ஆரம்பமானது. ஒரு தொலைபேசியிலிருந்து மற்றுமொரு தொலைபேசிக்கு பரிமாறப்பட்ட இணையதள இணைப்பு (Link) ஒன்றைத் தொடர்ந்து, ஆவணங்களின் தொகுப்பொன்று இணையத்தில் கசிந்தது.
யாரோ ஒருவர் அந்த ஆவணங்கள் அடங்கிய கோப்புறையை (Folder) சிலருக்குப் பகிர்ந்தார். சில நாட்களிலேயே இது "கூகுள் ரகசிய ஆவணக் கசிவு" (Google Files Leak) என உலகம் முழுவதும் பரவியது. அதனைத் தொடர்ந்து அதன் நிழற்படங்கள் (Screenshots) பரவியதுடன், சில நபர்களின் பெயர்கள் அதில் விசேடமாக கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தன.
அதேவேளை, நீண்டகாலமாக மறக்கப்பட்டிருந்த பழைய ஆவணங்கள் திடீரென ரகசிய சாட்சியங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. இதன் காரணமாக ஒரு பெயர் மீண்டும் சமூகத்தில் பேசுபொருளாக மாறியது.
அவர் தான் ஜெப்ரி எப்ஸ்டைன் (Jeffrey Epstein).
சில மணித்தியாலங்களுக்குள், இலங்கையின் சமூக ஊடகப் பரப்பில் ஒரு மாறுபட்ட கேள்வி எழுந்து உலாவத் தொடங்கியது. "அவர் எப்போதாவது இங்கே வந்திருக்கிறாரா?" வரலாற்றின் மிக மோசமான குற்றவியல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்துடன் இலங்கை ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளதா எனப் பலரும் வினவத் தொடங்கினர்.
இந்தக் கேள்வி எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தும் எழவில்லை; இது மக்களின் ஆர்வத்தினால் உருவானது. அத்துடன், அந்த ஆவணங்களுக்குள் மிக முக்கியமான ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது என மக்கள் மத்தியில் எழுந்த வளர்ந்து வரும் ஆவல் காரணமாகவே இது உருவானது.
ஆனால், உண்மையான விசாரணைகள் வெறும் ஆர்வத்தின் அடிப்படையிலோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ ஆரம்பமாவதில்லை; அவை உத்தியோகபூர்வ அறிக்கைகளின் அடிப்படையிலேயே ஆரம்பமாகின்றன.
இன்று பலரும் "கூகுள் ஆவணக் கசிவு" என விவரிப்பது கூகுள் அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஊடுருவல் (Breach) அல்லது புதிதாகக் கண்டறியப்பட்ட ரகசியத் தரவுத் தளம் அல்ல.
தற்போது பகிரப்படும் இந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருப்பது, ஜெப்ரி எப்ஸ்டைன் மற்றும் அவரது வலைப்பின்னல் தொடர்பாகப் பல ஆண்டுகளாக பல்வேறு வழக்கு நடவடிக்கைகளின் போது பகிரங்கப்படுத்தப்பட்ட நீதிமன்ற அறிக்கைகள், சத்தியக்கடதாசிகள், சாட்சிப் பட்டியல்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் மட்டுமேயாகும்.
இவை எப்போதும் பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய தகவல்களாகவே இருந்தன. ஆனால் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் ஒரே கோப்புறையில் (Folder) வைக்கப்பட்டபோது, அந்தத் தகவல்கள் திடீரென ரகசியமான அல்லது தடைசெய்யப்பட்ட விடயங்கள் என மக்கள் உணரத் தொடங்கினர்.
அவை முன்வைக்கப்பட்ட விதம் ஒரு மர்மத்தை உருவாக்கியதுடன், அந்த வடிவம் ஒரு அச்சத்தையும் தோற்றுவித்தது. இறுதியில் அந்தக் கதை தானாகவே கட்டமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களைத் தேடும்போது "இலங்கை" (Sri Lanka) என்ற பெயரும் தென்பட்டது. உலகளாவிய ரீதியிலான குற்றவியல் கதையொன்றின் ஓர் ஆவணத்தில் ஒரு நாட்டின் பெயர் குறிப்பிடப்படுவது கூட சந்தேகத்தை ஏற்படுத்தப் போதுமானது.
எப்ஸ்டைன் இலங்கைக்கு வந்தாரா, இங்கு சில காலம் வாழ்ந்தாரா அல்லது ரகசியமாக இங்கிருந்து தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா எனப் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இலங்கை இந்தக் கதைக்குள் ஏன் உள்வாங்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், ஜெப்ரி எப்ஸ்டைன் என்பவர் உண்மையில் யார் என்பதையும், இணையத்தின் ஊடாக அவரது பெயர் மீண்டும் பிரபலமடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே புலனாய்வாளர்கள் அவரை எவ்வாறு நோக்கினார்கள் என்பதையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
ஜெப்ரி எப்ஸ்டைன் தனது தொழில்சார் திறமையினால் பிரபலமானவர் அல்ல; அவர் தனக்கிருந்த உயர்மட்டத் தொடர்புகளாலேயே பிரபலமானார். அவர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள செல்வாக்கு மிக்க மற்றும் செல்வந்தர்களுடன் நிரந்தரமாகத் தொடர்புகளைப் பேணியவர்.
பகிரங்கமாக அவர் மிகவும் நம்பகமான ஒரு நிதியாளராக (Financier) அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் ரகசியமாக, சட்ட அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களும் கூறுவது போல், அவர் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் மிக நுணுக்கமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு வலைப்பின்னலை நடத்தி வந்துள்ளார்.
இது தற்செயலாக நடந்த குற்றங்களின் வரிசை அல்ல. இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் உள்வாங்கப்பட்டனர். சந்திப்புகள் ஒரே மாதிரியாகவே இடம்பெற்றன. இடங்கள் மிகவும் அவதானமாகத் தெரிவு செய்யப்பட்டன. பயணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. எப்ஸ்டைனுக்கும் அவர் இலக்கு வைத்த நபர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியைப் பேணுவதற்கு அவரது பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
2008ஆம் ஆண்டு புளோரிடா அதிகாரிகளுக்கு இந்த குற்ற வலைப்பின்னலை வெளிக்கொணரும் வாய்ப்பு கிடைத்தது. எப்ஸ்டைன் மீது சிறுமிகள் தொடர்பான பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த வழக்கின் ஊடாக இதைவிடப் பரந்த விசாரணையை மேற்கொள்ள வாய்ப்பிருந்தது.
ஆனால் அது மிகவும் அமைதியாக முடிவடைந்தது. ஒரு "மன்னிப்பு உடன்படிக்கை" (Plea Agreement) ஊடாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் மட்டுப்படுத்தப்பட்டதுடன், அதன் மூலம் அவர் பாரிய பெடரல் (Federal) விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்.
அந்தத் தீர்மானத்திற்குப் பின் மேலும் ஒரு தசாப்த காலத்திற்கு எப்ஸ்டைன் தனது ஆடம்பர வாழ்க்கை, தனிப்பட்ட விமானப் பயணங்கள் மற்றும் சர்வதேசத் தொடர்புகளுடன் சுதந்திரமாக வாழ்ந்தார். சட்ட அமைப்பு அதன் பக்கம் கண்களை மூடிக்கொண்டிருந்தது.
இறுதியில் 2019ஆம் ஆண்டு அந்த மௌனம் கலைந்தது. நியூயோர்க்கின் பெடரல் சட்ட அதிகாரிகளினால் சிறுமிகளைப் பாலியல் கடத்தல் செய்த புதிய குற்றச்சாட்டுகளின் கீழ் எப்ஸ்டைன் கைது செய்யப்பட்டார். இம்முறை விசாரணைகள் பல ஆண்டுகள் மற்றும் பல இடங்களை நோக்கி விரிவடைந்தன. எப்ஸ்டைனுக்குப் பின்னால் உள்ள முழு வலைப்பின்னலும் வெளிப்படும் என முதல் முறையாகக் கருதப்பட்டது.
ஆனால் அந்தத் தருணம் ஒருபோதும் உதயமாகவில்லை. கைது செய்யப்பட்டு சில வாரங்களிலேயே எப்ஸ்டைன் சிறையினுள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உத்தியோகபூர்வ முடிவின்படி அது ஒரு தற்கொலையாகும். புலனாய்வாளர்களுக்கு இது ஒரு நிரந்தரப் பிரச்சினையாக மாறியது. இந்த வழக்கின் பிரதானியிடம் இனிமேல் விசாரணை நடத்த முடியாது என்ற நிலை உருவானது.
இப்போது எஞ்சியிருப்பது ஆவணங்கள் மட்டுமே. தற்போது இணையம் முழுவதும் பகிரப்படுவது அந்த ஆவணங்களாகும். அவற்றில் மின்னஞ்சல்கள் (Emails), பயணத் தரவுகள், நீதிமன்ற அறிக்கைகள், நிதித் தகவல்கள் மற்றும் சத்தியப் பிரமாணம் செய்யப்பட்ட சாட்சியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் மிகவும் துல்லியமான கேள்விகளுக்குப் பதில்களைத் தேடவே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, யார் யாருடன் தொடர்பிலிருந்தார்கள், பயணங்களை ஒருங்கிணைத்தது யார், பணக் கொடுப்பனவுகளைச் செய்தது யார் போன்ற விடயங்களாகும்.
ஆனால், தொழில்சார் பின்னணியின்றி இவ்வாறான ஆயிரக்கணக்கான ஆவணங்கள் பொதுமக்கள் கைகளுக்குக் கிடைக்கும்போது, அவை வேறு வடிவத்தைப் பெறுகின்றன. ஒரு பெயர் பத்திரிகைச் செய்தியாக மாறுகிறது. ஒரு குறிப்பு குற்றச்சாட்டாக மாறுகிறது. இலங்கை இந்தக் கதைக்குள் உள்வாங்கப்பட்டது இவ்வாறுதான்.
உண்மையிலேயே இணையத்தில் உலாவரும் சில ஆவணங்களில் இலங்கை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓர் ஆவணத்தில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்ட மாத்திரத்திலேயே அந்த நபர் அந்த நாட்டில் இருந்தார் என்றோ அல்லது அங்கு ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டார் என்றோ அல்லது குற்றமிழைத்தார் என்றோ அர்த்தமாகாது.
இவற்றை எப்ஸ்டைனின் சம்பவத்துடன் ஒப்பிடும்போது, ஒரு முடிவிற்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஜெப்ரி எப்ஸ்டைன் இலங்கையில் வாழ்ந்ததற்கோ அல்லது இலங்கையை மையமாகக் கொண்டு தனது நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்கோ அல்லது அவரது குற்ற வலைப்பின்னலின் எந்தவொரு பகுதியும் இலங்கையில் இடம்பெற்றதற்கோ இதுவரை எவ்விதமான உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளும் (No Confirmed Evidence) இல்லை.
இலங்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தற்செயலானவை என்றே தோன்றுகின்றன. அவை பெரும்பாலும் பயணங்கள் தொடர்பான தகவல்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் பயணங்களுடன் தொடர்புடையவை மாத்திரமே. சர்வதேச விசாரணைகளின் போது ஆவணங்களில் பல நாடுகளின் பெயர்கள் இடம்பெறுவது இயல்பானது.
உண்மையான மர்மம் எப்ஸ்டைன் எப்போதாவது இலங்கைக்கு வந்தாரா என்பதில் இல்லை. உண்மையான மர்மம் என்னவென்றால், தேவையான சாட்சியங்கள் இருந்தும், இவ்வளவு காலம் அவர் சட்டத்திற்குச் சிக்காமல் மறைந்திருந்தது எப்படி என்பதாகும்.