டம்பிளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: பாடசாலைக்குத் திரும்ப மாணவர்கள் அச்சம்!

டம்பிளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: பாடசாலைக்குத் திரும்ப மாணவர்கள் அச்சம்!

கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பாடசாலையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவது பெரும் சவாலாக இருக்கும் என அங்கிருந்த தப்பிய மாணவன் ஒருவன் கவலை வெளியிட்டுள்ளான்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் ஐந்து மாணவர்கள் மற்றும் ஒரு பெண் ஆசிரியை உட்பட அறுவர் கொல்லப்பட்டதோடு, துப்பாக்கித்தாரியின் தாயார் மற்றும் சகோதரனும் அவர்களது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது மெக்கானிக்ஸ் (Mechanics) வகுப்பறையில் இருந்த தாரியன் குவிஸ்ட் (Darian Quist) எனும் 12ஆம் தர மாணவன், அந்தப் பயங்கரமான தருணங்களை ஊடகங்களிடம் விவரித்தபோது:

"வழமையான எச்சரிக்கை ஒலிகளை விட அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதிபர் எமது வகுப்பறைப் பக்கமாக ஓடிவந்து, கதவுகளைப் பூட்டுமாறு கத்தினார். முதலில் இது ஒரு ஒத்திகை என்று நினைத்தோம், ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததும் கதவுகளைத் தடுப்பு வேலிகளால் மறித்துக்கொண்டு உள்ளே பதுங்கினோம்."

தகவல் கிடைத்ததும் பிற்பகல் 1:20 மணியளவில் ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் அப்பகுதியில் அவசர எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 25 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 18 வயதுடைய ஜெசி வான் ரூட்சலர் (Jesse Van Rootselaar) எனும் இளைஞனே இந்தத் தாக்குதலை நடத்தியதோடு, பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவது மிகவும் கடினமாக இருக்கும். உயிரிழந்த மாணவர்களின் நண்பர்கள் மற்றும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. என்னைப் பொறுத்தவரை, பலர் மீண்டும் பாடசாலைக்கே வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன்" என மாணவன் தாரியன் தெரிவித்துள்ளார்.

மாணவனின் தாயார் ஷெல்லி, பாடசாலைக்கு எதிரே உள்ள அலுவலகத்தில் பணியாற்றியபோது, பொலிஸார் துப்பாக்கிகளுடன் நிலைநாட்டப்பட்டிருந்ததையும் அம்புலன்ஸ் வண்டிகள் விரைவதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது மகனுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவாறே அவர் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் ஈபி (David Eby) டம்பிளர் ரிட்ஜ் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அத்துடன், கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு உயிரிழந்தவர்களுக்காக அந்தப் பிரதேசத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முழுச் சமூகமும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி