திருகோணமலையில் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரமானது, நாட்டுக்குள் திட்டமிட்ட முறையில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்ட ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:
"இந்த நாட்டின் மீது திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் கலாசாரத் தாக்குதல்களைக் கண்டிப்பதற்காகவே நாம் இதில் தலையிட்டோம். திருகோணமலைச் சம்பவம் என்பது அதில் ஒன்று மாத்திரமே. உண்மையில், அதைவிடவும் பாரதூரமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நாட்டில் வேண்டுமென்றே ஒரு அமைதியின்மையை ஏற்படுத்தவும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் அரசாங்கம் கையாளும் ஒரு கருவியாகவே இதனைப் பார்க்கின்றோம். இது எங்களுக்கு நன்றாகவே புலப்படுகிறது."