ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புதுடில்லிக்குப் பயணம்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புதுடில்லிக்குப் பயணம்!

இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள "இந்திய - செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க உச்சிமாநாடு 2026"இல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்காலம் குறித்து விவாதிக்க உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கவுள்ளது.

இந்த மாநாடானது 'மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்' (People, Planet and Progress) ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களின் அடிப்படையில் அமையவுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் இந்தியாவின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அவருடன் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த உச்சிமாநாட்டில் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான தூதுக்குழுவினரும் இந்த ஆலோசனைகளில் பங்கேற்கவுள்ளனர்.

பொறுப்பு வாய்ந்த செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் நிலையான அபிவிருத்தியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கு குறித்து இந்த உச்சிமாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி