உயிருக்கு போராடும் சிறுமியின் தாய் துப்பாக்கிதாரியின் தாய்க்காக இரக்கம்; கனடாவில் நெகிழ்ச்சி

உயிருக்கு போராடும் சிறுமியின் தாய் துப்பாக்கிதாரியின் தாய்க்காக இரக்கம்; கனடாவில் நெகிழ்ச்சி

கனடாவின் 'டம்பிளர் ரிட்ஜ்' (Tumbler Ridge) பாடசாலையில் இடம்பெற்ற கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து, மரணத்துடன் போராடி வரும் 12 வயது சிறுமியான மாயா கெபாலாவின் (Maya Gebala) பெற்றோர், அவளது உடலில் ஏற்படும் சிறிய அசைவுகளைக் கூட பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை டம்பிளர் ரிட்ஜ் இரண்டாம் நிலை பாடசாலையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் துப்பாக்கிதாரியின் தாய், சகோதரன் உட்பட எண்மர் கொல்லப்பட்டனர். 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாயா, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், வானூர்தி மூலம் வான்கூவர் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் போராடும் சிறுமி:

அவசர சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்க நிலையில் இருந்த மாயா, தற்போது தனது இடது கை மற்றும் கால்களை அசைத்ததோடு, இருமல் சத்தத்தையும் எழுப்பியுள்ளார். இது அவரது பெற்றோருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. "அவள் இதிலிருந்து மீண்டு வருவாள், அவள் மிகவும் பிடிவாதமானவள்" என அவளது தந்தை டேவிட் கெபாலா (David Gebala) கண்ணீருடன் தெரிவித்தார்.

மாயாவின் காயங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'GoFundMe' ஊடாக அவளது சிகிச்சைக்காக பெருமளவு நிதி திரட்டப்பட்டு வருகின்றது.

துப்பாக்கிதாரியின் தாய்க்காக இரக்கம்:

இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் அரசியல் கருத்துக்களை முன்வைப்பதோடு, உயிரிழந்த துப்பாக்கிதாரியின் தாயாரான ஜெனிபர் ஸ்ராங் (Jennifer Strang) குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், மாயாவின் தாயார் சியா எட்மண்ட்ஸ் (Cia Edmonds) தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த ஜெனிபர் ஸ்ராங் தனது தோழி எனத் தெரிவித்த அவர், 18 வயதான துப்பாக்கிதாரி ஜெசி வான் ரூட்செலாரை (Jesse Van Rootselaar) சிறுவயதில் தான் பராமரித்துள்ளதாகவும் (Babysit) குறிப்பிட்டார்.

"மக்களே, இதனை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். இது துப்பாக்கிகள் அல்லது பாலின அடையாளம் பற்றிய பிரச்சினை அல்ல. இது ஒரு மனநலப் பிரச்சினை மற்றும் அதற்குரிய வளங்கள் இல்லாமையே காரணமாகும். தற்கொலை செய்துகொண்ட துப்பாக்கிதாரியின் தாய் ஒரு உழைப்பாளி. அவர் தனது மகனின் மனநலப் போராட்டத்திற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அந்தத் தாய் படும் துயரம் எனக்குப் புரிகிறது" என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த விதம்:

சம்பவம் நடந்த அன்று, மாயா தனது பாடசாலைத் திட்டம் (Project) குறித்து மிகவும் உற்சாகமாக இருந்தாள். மதிய உணவின் போது தனது தாயின் கடைக்குச் செல்லவிருந்தாள். ஆனால் பாடசாலை முடக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும் பதறியடித்துச் சென்ற எட்மண்ட்ஸ், தனது மகள் சுடப்பட்ட செய்தியை மற்றுமொரு பெற்றோர் காண்பித்த குறுஞ்செய்தி மூலம் அறிந்துகொண்டார்.

வைத்தியசாலைக்குச் சென்றபோது, தனது மகளின் ஆடைகளை வைத்தியர்கள் அகற்றி சிகிச்சை அளிப்பதைக் கண்டு துடித்ததாக அவர் விவரித்தார். மாயாவின் ஒரு காது மடலூடாகச் சென்ற தோட்டா, தலையின் பின்புறமாக வெளியேறியுள்ளதோடு, மற்றுமொரு தோட்டா கழுத்துப் பகுதியில் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாயா தற்போது கண் விழிப்பார் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் காத்திருக்கின்றனர். "அவள் ஒருமுறை 'அம்மா' என்று அழைத்தால் போதும், அதுவே எனக்குப் பெரிய நிம்மதி" என எட்மண்ட்ஸ் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி