அரசு கொண்டுவரவுள்ள 'ஏக்கிய இராஜ்ய' (ஒற்றையாட்சி) அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை வலியுறுத்தித் தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தியிருந்தார்:
தமிழ் மக்கள் தேர்தல்கள் தோறும் சமஷ்டி தீர்வுக்கே ஆணை வழங்கி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி (ஏக்கிய இராஜ்ய) வரைபை நிறைவேற்ற முனைகின்றது.
இந்தச் சதியை முறியடிக்கவும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை முன்வைக்கவும் தமிழ்த் தரப்புகள் ஓரணியில் திரள வேண்டும்.
தவிர்த்துக் கொண்ட தமிழரசுக் கட்சி இந்த அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி. கே.சிவஞானம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
'உங்களது கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ள இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் (ஒற்றையாட்சி வரைவு தொடர்பான விமர்சனம்), நாளை (15.02.2026) நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமற்றது. எனினும், ஒற்றையாட்சி முறையை முழுமையாக எதிர்ப்பதிலும், சமஷ்டி முறையை வலியுறுத்துவதிலும் எமது கட்சி என்றும் உறுதியாகவே உள்ளது.'
அரசியல் முக்கியத்துவம் அரசு புதிய அரசமைப்பை நோக்கி நகரும் இக்கட்டான சூழலில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியாக ஒன்றிணைவதில் மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளமையை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.