ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் சர்ச்சைக்கரிய சில விடயங்கள் குறித்து நாட்டு மக்களுடன் நேரடியாக உரையாடுவதற்கு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகின்றார்.
இலகுவான அரசியல் பாதையைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, இன ரீதியான பதற்றங்கள் மற்றும் இனவாத அச்சங்கள் உள்ளிட்ட கடினமான விடயங்களுக்குத் தீர்வுகாண அவர் தீர்மானித்துள்ளார். அவரது அண்மைக்கால உரைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியமைக்கு பிரதானமான மூன்று காரணங்கள் காணப்படுகின்றன.
முதலாவதாக, தேசியவாத நோக்கங்களுடன் வடக்கு மாகாணத்திற்குச் செல்லும் பௌத்தர்கள் குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இரண்டாவதாக, காங்கேசன்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 'திஸ்ஸ ரஜ மஹா விகாரை' எனும் பௌத்த விகாரையை விரிவுபடுத்துவது தொடர்பான சர்ச்சை நிலவுகின்றது.
இந்த விகாரையானது அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் சிங்கள தேசியவாத குழுக்களுக்கும் இடையில் ஒரு பதற்றமான இடமாக மாறியுள்ளது. மூன்றாவதாக, சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது யுத்த வெற்றியின் இராணுவ முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி தீர்மானித்தமையாகும்.
அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே இருந்த காலப்பகுதியிலும் கூட, அநுர குமார திஸாநாயக்க ஒரு மக்கள் கல்வியியலாளர் எனும் தனது பொறுப்பை மிகத் தீவிரமாகவே கையாண்டார். அவர் நாடாளுமன்றத்தில் நீண்ட, நன்கு ஆராயப்பட்ட மற்றும் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உரைகளை நிகழ்த்தி வந்தார்.
ஜனாதிபதி பதவியிலும் அவர் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். அவரது உரைகளின் பிரதான நோக்கம், வெறும் வாக்குகளை இலக்காகக் கொள்ளாமல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மக்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவதுமாகும். இலங்கையிலோ அல்லது உலகின் ஏனைய நாடுகளிலோ வாக்குகளைப் பெறுவதற்கான இலகுவான வழி, தேசியவாத மற்றும் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டி ஆதரவைத் திரட்டுவதாகும்.
குறுகிய இனவாதப் பிரிவினைகளைத் தூண்டுவது தற்காலிக தேர்தல் வெற்றிகளைத் தரக்கூடும், ஆனால் அது நாட்டிற்கு நீண்டகாலப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாறு காட்டுகின்றது.
எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் பொதுமக்களில் ஒரு தரப்பினரும் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளனர். தமிழ் மக்களின் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது சிறுபான்மைச் சமூகங்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு செய்வதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேவேளை, இதற்கு மாற்றுக்கருத்துடையோர் சிங்கள வாக்குகளைக் கவர்வதற்காகவே இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் கூறக்கூடும். தேசியவாத உணர்வுகளில் தங்கியிருக்கும் அரசியல்வாதிகள், ஜனாதிபதியின் கருத்துக்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் செயலாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய பரந்த பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும்.
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பௌத்தர்கள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்ட போது, அவர் நாகதீபம் அல்லது கந்தரோடை போன்ற நீண்டகாலமாக நிலைபெற்றுள்ள பௌத்த மரபுரிமைத் தலங்களுக்குச் செல்வதைக் குறிப்பிடவில்லை. அவரது கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட மற்றும் சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பிலேயே அமைந்திருந்தன.
அதாவது, காங்கேசன்துறையில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை மற்றும் அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய விகாரைகள் குறித்தே அவர் சுட்டிக்காட்டியிருந்தார். காங்கேசன்துறை விகாரையானது அப்பகுதியில் வாழும் பௌத்த மக்களின் மதத் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்படவில்லை. ஏனெனில் அப்பிரதேசத்தில் அத்தகைய சமூகம் எதுவும் வசிக்கவில்லை.
முன்னர் தமிழ் சிவிலியன்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே இது அமைக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் இது இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையே இந்த விவகாரம் இவ்வளவு சர்ச்சைக்குள்ளாவதற்குப் பிரதான காரணமாகும்.
தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது, விகாரை அதிகாரிகள் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பை 14 ஏக்கர் வரை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பதனாலேயே உருவெடுத்துள்ளது. அங்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் வரையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பௌத்த விகாரை ஒன்று இருந்ததாக அவர்கள் வாதிடுகின்றனர்.
எவ்வாறாயினும், விகாரையின் இந்த விரிவாக்க நடவடிக்கையானது அண்மித்த பகுதிகளில் வாழும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி, பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் நிரந்தரமான பௌத்த மத இருப்பை உருவாக்கிவிடும் என அப்பகுதி தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்கேசன்துறை வாழ் தமிழ் மக்களுக்கு பௌத்த மதம் ஒரு பிரச்சினையல்ல. மாறாக, நில அபகரிப்பிற்காக மதம் பயன்படுத்தப்படுவதும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சிப்பதுமே அவர்களின் பிரதான அச்சமாகும்.
இதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கின் ஏனைய பகுதிகளில் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் தமது முகாம்களுக்குள் சில விகாரைகளும் வழிபாட்டிடங்களும் அமைக்கப்பட்டன. தற்போது இராணுவ முகாம்கள் அகற்றப்படும் நிலையில், இத்தகைய மதத்தலங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரையை ஒரு முக்கிய மதத்தலமாக முன்னிலைப்படுத்துவதற்காக தெற்கிலிருந்து சில குழுக்களினால் பாரிய யாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை மத ரீதியான செயற்பாடுகளாகக் காட்டப்பட்டாலும், அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் செயலாகவே உள்ளூர் மக்கள் இதனைக் கருதுகின்றனர். இத்தகைய ஒவ்வொரு விஜயமும் பதற்றத்தை அதிகரிப்பதுடன், தமிழ் மக்களின் போராட்டங்களுக்கும் வழிவகுக்கின்றது. இது மோதல்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் தோற்றுவிக்கின்றது.
இடம்பெயர்வு, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நில இழப்பு போன்றவற்றைச் சந்தித்த ஒரு சமூகத்திற்கு, சர்ச்சைக்குரிய நிலத்தில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் அரச அனுசரணையுடன் அமைக்கப்படும் ஒரு மதக் கட்டிடம் என்பது, போர் மற்றும் அழிவின் வலிமிகுந்த நினைவுகளையே மீளவும் கிளறுகின்றது.
பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு தரப்பினரை கேள்விக்குட்படுத்துவது கடினமான காரியமாக இருந்தாலும், நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு ஜனாதிபதி இத்தகைய தருணங்களில் மௌனமாக இருக்க முடியாது.
ஜனாதிபதியின் சுதந்திரதின உரை குறித்தும் கடுமையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர் தனது உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றி குறித்துக் குறிப்பிடவில்லை என்பதோடு, இராணுவத்தினரை விளிக்க 'ரணவிருவோ' (போர் வீரர்கள்) என்ற பதத்தையும் பயன்படுத்தவில்லை.
இதனைப் பாதுகாப்புப் படையினரின் தியாகங்களைக் குறைத்து மதிப்பிடும் அல்லது உதாசீனப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பல சிங்கள தேசியவாத அமைப்புகள் வர்ணித்துள்ளன. எவ்வாறாயினும், சுதந்திர தினம் என்பது வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களையே கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இத்தினம் பெரும்பாலும் போராட்டங்கள் மற்றும் துக்க தினமாகவே அனுஷ்டிக்கப்படுகின்றது. இது சில நேரங்களில் 'கறுப்பு நாளாக' அழைக்கப்படுவதோடு, தங்களை அந்நியப்படுத்தும் மற்றும் தங்களது தேவைகளை முழுமையாக அங்கீகரிக்காத ஒரு அரசை வலுப்படுத்துவதற்கான அடையாளமாகவே அங்குள்ள மக்களால் பார்க்கப்படுகின்றது.
இதற்கு மாறாக, சுதந்திர தினத்தை நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான ஒரு கொண்டாட்டமாக மாற்றுவதே ஜனாதிபதியின் இலக்காக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது அரசியல் இலாபங்களுக்காகவோ அவர் இத்தகைய நிலைப்பாடுகளை எடுக்கின்றார் எனக் கருதுவது தவறானது. அவர் பதவியேற்று ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ள நிலையில், குறுகிய கால தேர்தல் வெற்றிகளுக்காக இத்தகைய அரசியல் அபாயங்களை அவர் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
உண்மையில், அவரது இந்த நிலைப்பாடுகள் பலமான தேசியவாத அரசியல் குழுக்களுக்கு சவாலாக அமைவதுடன், அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் தோற்றுவிக்கக்கூடும். இதன் மூலம் பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவை அவர் இழக்கும் அபாயமும் உள்ளது. இதிலிருந்து, அவரது முடிவுகள் தேர்தல் வியூகங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதும், அவை சில கொள்கைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என்பதும் தெளிவாகின்றது.
இலங்கையின் நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியானது, ஒரு காலத்தில் அமைதியாக வாழ்ந்து பின்னர் தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதி திஸாநாயக்க உணர்ந்துள்ளார். அரசியலுக்குச் சாதகமான விடயங்களை மாத்திரம் பேசாமல், தேவையான கசப்பான உண்மைகளைப் பேசுவதற்கான தைரியம் அவரிடம் இருப்பது அவரது உண்மையான அரசியல் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஒரு அபூர்வமான தேசிய தலைமைத்துவப் பண்பைக் காட்டுகின்றன. அவர் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை இனவாதப் பெருமிதங்களிலிருந்து விடுவித்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசியக் கொள்கையை நோக்கி நகர்த்த முயல்கின்றார்.
தேசிய நிகழ்வுகள் ஒரு சமூகத்தை வெற்றியாளராகவும் மற்றைய சமூகத்தைத் தோல்வியுற்றவராகவும் உணரச் செய்தால், குறிப்பாக ஒரே நாட்டுக்குள் இடம்பெற்ற மோதலுக்குப் பின்னர், அங்கு நல்லிணக்கம் ஒருபோதும் வெற்றியடையாது.