கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ரம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட அஞ்சலி நிகழ்வில் பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர். 18 வயதான ஜெஸ்ஸி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar) என்பவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள அமைதியான ரம்பிளர் ரிட்ஜ் நகரையும் முழு நாட்டையும் உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து, அரசியல் பேதங்களை மறந்து கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த அஞ்சலி நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.
பிரதமர் மார்க் கார்னியுடன் ஆளுநர் நாயகம் மேரி சைமன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே, பிளாக் கியூபெக்வா தலைவர் இவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட் மற்றும் என்.டி.பி (NDP) கட்சியின் இடைக்காலத் தலைவர் டொன் டேவிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் ரம்பிளர் ரிட்ஜ் மேயர் டெரில் கிராகோவ்காவினால் ஒரு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
"எவருமே தனித்து இந்தப் பாதையைக் கடக்கவில்லை. இன்றைய மாலைப் பொழுது என்பது நினைவுகூர்வதற்கும், சிந்திப்பதற்கும் மற்றும் அன்பைப் பகிர்ந்து கொள்வதற்குமானது" என அவர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.
அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, கடந்த காலங்களில் ரம்பிளர் ரிட்ஜ் சமூகம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் காட்டுத்தீ போன்ற அனர்த்தங்களின் போது அவர்கள் காட்டிய ஒற்றுமையை நினைவு கூர்ந்தார்.
"செவ்வாய்க்கிழமை அந்த நினைத்துப் பார்க்க முடியாத துயரம் நேர்ந்தபோது, நீங்கள் மீண்டும் ஒன்றாக நின்றீர்கள். இரண்டு நிமிடங்களுக்குள் முதலுதவிப் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்தனர். இப்போது நீங்கள் ஒருவரையொருவர் அணைத்து ஆதரவாக இருப்பது போல, அன்றும் ஒருவருக்கொருவர் துணையாக நின்றீர்கள்" என அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்திக்குமாறு கோரிய பிரதமர், ரம்பிளர் ரிட்ஜ் மக்களுடன் முழு கனடாவும் துணை நிற்பதாக உறுதியளித்தார்.
"கனடிய மக்கள் உங்களுடன் இருக்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். இன்று இரவு நீங்கள் வீடு திரும்பும்போது, சிலரது வீடுகள் நிசப்தமாக இருக்கலாம், சிலரது அறைகள் வெறுமையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தனிமையில் இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்" என பிரதமர் கார்னி உருக்கமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கனடாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தலைவர்கள் அனைவரும் மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.
இது குறித்து சி.பி.சி (CBC) ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்த பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே, பிரதமர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே விமானத்தில் ரம்பிளர் ரிட்ஜ் நோக்கிப் பயணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
"ஒன்றாக இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு இடமில்லை என்ற உணர்வுடன் நாங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொண்டோம். ஒவ்வொரு கனடியராலும் இங்கு வர முடிந்திருந்தால், அவர்களும் ரம்பிளர் ரிட்ஜ் மக்களுக்கு ஆறுதல் கூறவே விரும்பியிருப்பார்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.