கனேடியக் கடற்படையின் போர்க்கப்பல்களை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிய இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை (Torpedo) வெற்றிகரமாகப் பரீட்சார்த்த முறையில் ஏவிச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கனேடியப் படைகளின் விசேட சோதனைத் தளத்தில் வைத்து, 'மார்க் 54' (Mark 54) ரகத்தைச் சேர்ந்த இந்த நவீன ஏவுகணை அண்மையில் ஏவப்பட்டது. கனேடியக் கடற்படையின் 'எச்.எம்.சி.எஸ் ரெஜினா' (HMCS Regina) எனும் போர்க்கப்பலில் இருந்து இந்தத் தாக்குதல் சோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அமெரிக்கத் தயாரிப்பான இந்த அதிநவீன ஆயுதத்தைப் பயன்படுத்திய முதலாவது கனேடியப் போர்க்கப்பலாகவும் இது பதிவாகியுள்ளது.
நவீனமயமாக்கல் திட்டம்
கனேடியக் கடற்படையின் வசம் உள்ள 12 போர்க்கப்பல்களின் தாக்குதல் கட்டமைப்புகளை முழுமையாக நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து கனேடிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், "இந்த ஏவுகணைகள் கனேடியப் போர்க்கப்பல்களில் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இம்மாத ஆரம்பத்தில் (பெப்ரவரி 2 முதல் 4 வரை) இச்சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில், சுமார் 514 மில்லியன் டொலர் செலவில் 425 ஏவுகணைக் கருவிகளை (Torpedo kits) அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுத்திருந்தது. பனிப்போர் காலத்து 'மார்க் 46' ரக ஏவுகணைகளை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 'மார்க் 54' தரத்திற்கு தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
செயற்பாட்டுத் திறன்
இந்த புதிய ஏவுகணையானது மேம்படுத்தப்பட்ட வழிகாட்டல் கட்டமைப்பு (Enhanced guidance systems) மற்றும் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது ஹாலிஃபாக்ஸ் ரகப் போர்க்கப்பல்கள் மட்டுமன்றி, சி.பி-140 அரோரா (CP-140 Aurora) விமானங்கள் மற்றும் சி.எச்-148 சைக்ளோன் (CH-148 Cyclone) உலங்குவானூர்திகளிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து 'எச்.எம்.சி.எஸ் ரெஜினா' கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் டேரன் ஸ்லீன் கருத்துத் தெரிவிக்கையில்:
"இந்த ஏவுகணையை முதன்முதலாகப் பரீட்சார்த்தம் செய்த கப்பல் என்ற பெருமை எமது மாலுமிகளுக்குச் சேரும். இச்சோதனையானது எமது படையினரின் தொழில்சார் திறமையை வெளிப்படுத்துவதுடன், எதிர்காலப் போரியல் களங்களில் எமது பலத்தை சர்வதேச ரீதியாக மெய்ப்பித்துள்ளது."
கடலுக்கடியில் நிலைகொண்டிருந்த ஒரு நிலையான இலக்கைக் குறிவைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிதல் மற்றும் தாக்குதல்களை முன்னெடுத்தல் தொடர்பாகப் பல முக்கியமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன ஏவுகணைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வரும்போது, கடலுக்கடியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் கனேடியக் கடற்படை கூடுதல் பலத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.