'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காது ஏமாற்றுவது துரோகம்!'

'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காது ஏமாற்றுவது துரோகம்!'

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸா

நாயக்க தலைமையிலான அரசு, தற்போது அதற்குப் பதிலாக புதிய 'பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட' வரைவைக் கொண்டுவர முயற்சிப்பது பாரிய அரசியல் ஒழுக்க மீறல்" என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

"தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவானது, நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. முன்னாள் ஆட்சியாளர்களான மைத்ரி, ரணில், ராஜபக்ஷக்கள் மற்றும் சந்திரிகா ஆகியோரிடமிருந்து தாம் மாறுபட்டவர் என்றும், மக்களின் உண்மையான நண்பன் என்றும் காட்டியே அநுரகுமார ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று அதே அடக்குமுறைச் சட்டங்களை மாற்று உருவில் கொண்டு வருவது, அவருக்கு வாக்களித்த சிங்கள, ஈழத் தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

"1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவினால் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் பலர் தடுத்து வைக்கப்பட்டனர்; சித்திரவதைக்குள்ளானார்கள்; காணாமல் ஆக்கப்பட்டனர். இவற்றை ஜே.வி.பி நன்கு அறியும். சிறைச்சாலைகளில் இன்னும் 12 பேர் நீண்டகாலத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிப்பதாக அநுரகுமார உறுதியளித்திருந்தார்.

"அரகலய போராட்டத்தின் போது சிங்கள இளைஞர்களும் ஊடகவியலாளர்களும் இச்சட்டத்தின் கீழ் கைது

செய்யப்பட்ட போதே தென்னிலங்கை சமூகம் விழித்துக்கொண்டது. அன்று போராட்டக்களத்தில் நின்று 'பயங்

கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்' என உரக்கக் குரல் கொடுத்தவர்களில் அநுரகுமார திஸாநாயக்க முன்னணி யில் இருந்தார்.

"அன்று அவர்கள் எழுப்பிய கோஷம் சட்டத்தை 'இரத்துச் செய்' என்பதுதானே தவிர, அதற்கு 'மாற்று' கொண்டு வருவது அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவுடன், அரசு இப்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது.

"அரசுக்கு எதிராக ஆயுத வன்முறைகள் முன்னெடுக்கப்படும் போது அதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் இருப்பதை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால், ஜனநாயகத்தை ஒடுக்கும் கருவியாக அமையும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்" என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி