தடி எடுத்தவன் தண்டல்காரன்!

தடி எடுத்தவன் தண்டல்காரன்!

முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்தின் தளபதி யென்று பேர் சொல்லிக் கொள்பவர். இலங்கை இராணுவத்தில் ஃபீல்ட் மார்ஷல் என்ற பட்டத்தை பெற்ற ஒரே ஓர் இராணுவ அதிகாரி.

இராணுவ சேவையின் பின்னர் அரசியலில் இறங்கினார் என்றாலும், பல சமயங்களில் சொதப்பல் பேச்சுக்களை அல்லது கருத்துகளை முன்வைத்து சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர்.

இப்போதும் அப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். இப்போது நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முழு இராணுவமும் கொழும்புக்கு அனுப்பப்பட்டாலும் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்கின்றமையை தடுக்க

எந்த வழியும் இல்லை என்றெல்லாம் அவர் தத்துவம் பேசியிருக்கிறார்.

அவர் கூறிய விடயங்கள் ஒரு புறத்தில் சரியானவை என்றாலும் மறு புறத்தில் முட்டாள்தனமானவை. ஆங்காங்கே நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிட மாட்டாது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் அமைதியான சமூக வாழ்வு முழுமையாகக் குழம்பிப் போய்விடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற அராஜக நிலை ஆழ வேரூன்றும். அது மட்டுமல்ல, புலிகள் மீதான யுத்த வெற்றி, அதனால் கிடைத்த அமைதி, சமாதானம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டு கொண்டாடும் கும்பல்களின் அட்டகாசமே பெரும் நாசமாக வந்துவிடும்.

பொருளாதார பாதிப்பு மாத்திரமல்லாமல் சமூகச் சீரழிவை நோக்கியும் நாடு நகர்ந்து கொண்டிருப்பதை அது உறுதிப்படுத்தும். சமூக சீரழிவினதும், பொருளாதாரப் பாதிப்பினதும் இறுதி விளைவு தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாவதுதான் என்பதை முன்னாள் இராணுவத் தளபதி புரியாமல் இருக்கிறார். முழு இராணுவத்தையும் கொழும்புக்கு அனுப்பினாலும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வதை நிறுத்த முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் முழு அளவில் படைத் தரப்பை பாதாள உலகக் கும்பல் களுக்கு எதிராகத் திருப்பி விட்டு, அவற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இப்படி கண்மூடித் தனமாக ஒரு வரை ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டு விட்டு தப்பி செல்கின்ற சகாப்தமும் முடிவுக்கு வந்துவிடும். அது புரியாதவர் போல பேசுகின்றார் சரத் பொன்சேகா.

இருக்கின்ற ஆட்சியாளர்களைத் தாஜா செய்து சமாளிக்க வேண்டும் என்ற கருத்தில், ஏதேதோ புரட்டிப் பேசி, தம்மை பெரிய இராணுவத் தத்துவ ஞானி போல கருத்துக்களை முன்வைக்க முனைகிறார் முன்னாள் இராணுவத் தளபதி.

அது மாத்திரமல்ல, இந்தப் பத்தியில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி நாட்டில் போதைப்பொருள் சாம்ராஜ்யமும், பாதாள உலகக் கும்பல்களின் அட்டகாசமும் உச்சமாக இருக்க, அவற்றுக்கு எதிராக முழுப் படைப் பலத்தையும் திருப்பிவிடாமல், அந்தப் படைப்பலத்தை அமைதியான தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்புக்காகத் தொடர்ந்து பேணுகின்ற தென்னிலங்கை ஆட்சியாளர்களின் போக்கை தமது இந்தக் கருத்து வெளிப்பாட்டின் மூலம் நியாயப்படுத்த முயல்கின்றார் முன்னாள் இராணுவ தளபதி.

இது அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பாதுகாப்புத் துறை ரீதியிலும் பிதற்றல் கருத்தாகவே கொள்ளப்பட வேண்டும்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி