கனடாவின் நியூ பிரன்ஸ்விக் (N.B.) மாகாணத்திலுள்ள மொன்க்டன் நகரில், குப்பைத் தொட்டி ஒன்றினுள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:10 மணியளவில் மொன்க்டனின் 'ஹை ஸ்ட்ரீட்' (High Street) பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக 'கொடியாக் பிராந்திய ஆர்.சி.எம்.பி' (Codiac Regional RCMP) பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்குள்ள வெளிப்புற குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவத்தை ஒரு 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என வகைப்படுத்தியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக நியூ பிரன்ஸ்விக் ஆர்.சி.எம்.பி.யின் 'முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்' (Major Crime Unit) ஒப்படைத்துள்ளனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் கிரகாம் ஹில் (Graham Hill) என்பவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தனது அறத்தோழரே (Roommate) முதலில் இச்சடலத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டார்.
"எனது அறத்தோழர் குப்பைத் தொட்டியைப் பார்த்தபோது, அதற்குள் ஒரு கையை அவதானித்துள்ளார். உடனடியாக அவர் 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். பொலிஸார் வந்திறங்கியதும், அந்தப் பெண்ணை வெளியே எடுத்துப் பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை உறுதியானது," என ஹில் தெரிவித்தார்.
அப்பகுதியில் வீடற்றவர்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும், இவ்வாறானதொரு சம்பவம் முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் பிரேதப் பரிசோதனைக்கு (Autopsy) உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, திங்கட்கிழமை அதிகாலை 'நோர்வூட் வீதி' (Norwood Street) பகுதியிலும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இது குப்பைத் தொட்டியில் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு நடவடிக்கையென பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் ஷெடியாக் (Shediac) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிக்கும், இந்த மரணத்திற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லையென பொலிஸ் அதிகாரி ஹான்ஸ் ஓலெட் (Hans Ouellette) தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.