மேற்கு கியூபெக்கிலுள்ள பனிச்சறுக்குத் திடலில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி, கியூபெக்கின் வேக்ஃபீல்ட் (Wakefield) பகுதிக்கு அருகிலுள்ள 'சென்டர் வோர்லேஜ்' (Centre Vorlage) பனிச்சறுக்குத் திடலுக்கு பாடசாலைச் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. மலை உச்சிக்குச் செல்லும் 'ஸ்கை லிஃப்ட்' (Ski Lift) எனப்படும் இயந்திர ஊர்தியில் இருந்து இறங்க முற்பட்ட போது, சிறுமியின் ஆடை எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கியுள்ளது.
அங்கிருந்த பெரியவர்கள் சிறுமியை விடுவிக்கப் போராடிய போதிலும், அது கைகூடவில்லை. இதனையடுத்து, சிறுமியை இயந்திரத்தினூடாகவே மலையின் அடிவாரத்திற்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அடிவாரத்தை வந்தடைந்த போது சிறுமி மூச்சற்ற நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த இரு மருத்துவர்கள் சிறுமிக்கு அவசர முதலுதவி (CPR) வழங்கியதைத் தொடர்ந்து, அவர் ஒட்டாவாவிலுள்ள CHEO சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக வைத்தியசாலை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், "எமது அருமை மகளைக் காப்பாற்றப் போராடிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கியூபெக் கட்டிட ஒழுங்குமுறை ஆணைக்குழு (Régie du bâtiment du Québec) ஆகியன தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இயந்திரக் கோளாறு ஏதேனும் விபத்திற்குக் காரணமா அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
இவ்விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த பனிச்சறுக்குத் திடல், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் மறைவுக்கு பனிச்சறுக்குத் திடல் நிர்வாகத்தினரும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
