தற்போது நிலவி வரும் இதமான காலநிலை மற்றும் சூரிய வெளிச்சம் ஒரு பாரிய பனிப்புயலின் ஆரம்பமாக இருக்கலாம் என வானிலை அவதானிப்பு நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வார நடுப்பகுதியில் இப்பிராந்தியத்தை கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை சூழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்கோ கவுண்டி (Simcoe County), பாரி, கொலிங்வுட், யோர்க் பிராந்தியம் மற்றும் முஸ்கோகா உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை அன்று நிலவக்கூடிய மோசமான வானிலை குறித்து 'சுற்றுச்சூழல் கனடா' (Environment Canada) மஞ்சள் நிற 'பனிப்புயல் அவதானிப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தன்கிழமை அன்று 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல மணிநேரம் நீடிக்கக்கூடிய உறைபனி மழையினால் (Freezing rain), வீதிகள் மற்றும் கட்டடங்களின் மேல் 2 முதல் 5 மில்லிமீட்டர் வரை ஐஸ் கட்டிகள் படிய வாய்ப்புள்ளது.
பனி மற்றும் ஐஸ் கலந்த நிலையினால் வீதிகள் மிகவும் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். இதனால் வாகனச் செலுத்துனர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இந்த பனிப்புயலானது புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை நீடிக்கக்கூடும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்திலுள்ள குறைந்த அழுத்த மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து, பனிப்பொழியும் அளவு மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரெனக் குறையும் பார்வைத் திறன் (Visibility) காரணமாக வாகனப் பயணங்களுக்கு மேலதிக நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடும் காற்று மற்றும் பனிப்பொழிவு காரணமாக மின்தடைகள் ஏற்படவும், மரங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.