மீண்டும் தீவிரமடையும் கடும் குளிர்; 20 செ.மீ பனிப்பொழிவு: -40 வரை சரியும் வெப்பநிலை!

மீண்டும் தீவிரமடையும் கடும் குளிர்; 20 செ.மீ பனிப்பொழிவு: -40 வரை சரியும் வெப்பநிலை!

பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் நிலவிய இதமான காலநிலைக்கு முற்றிலும் மாறாக, மாத இறுதியில் தெற்கு ஆல்பர்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் துருவக் குளிருடன் கூடிய வானிலை மீண்டும் தீவிரமடையவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டாவை நோக்கி நகரும் ஈரப்பதம் மிக்க காற்றழுத்த மண்டலமானது, வடக்கிலிருந்து வரும் துருவக் காற்றுடன் (Polar air mass) மோதவுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் கனத்த பனிப்பொழிவு, திடீர் வெப்பநிலை வீழ்ச்சி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பனிப்புயல் (Blizzard) போன்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை வரை மத்திய மற்றும் தெற்கு ஆல்பர்ட்டாவின் பெரும்பாலான பகுதிகளில் 10 முதல் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு நிலவக்கூடும். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும், எட்மன்டன் (Edmonton) நகரைச் சூழவுள்ள பகுதிகளிலும் அதிகளவு பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அன்று வெப்பநிலை மிக வேகமாகச் சரியக்கூடும். இரண்டு அல்லது மூன்று மணித்தியால இடைவெளிக்குள் சுமார் 10 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.

பகல்நேர அதிகூடிய வெப்பநிலை -20°C ஆகக் காணப்படும். இது இக்காலப்பகுதிக்குரிய சாதாரண வெப்பநிலையை விட 20 பாகை குறைவாகும்.

காற்றின் குளிர்மை (Wind Chill): புதன்கிழமை காலை வேளையில் காற்றின் வேகத்தினால் உணரப்படும் குளிரானது -30°C முதல் -40°C வரை செல்லக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களம் (ECCC) ஆல்பர்ட்டா, சஸ்காட்சுவான் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களுக்குப் பல்வேறு மஞ்சள் நிற எச்சரிக்கைகளையும் விசேட வானிலை அறிக்கைகளையும் விடுத்துள்ளது. "குளிர்காலம் மீண்டும் சடுதியாகத் திரும்பியுள்ளது" எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், பார்வைத் திறன் குறைவடைதல் மற்றும் வீதிகள் வழுக்கும் தன்மை குறித்து மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ளனர்.

இந்த கடும் குளிரானது வரும் வாரம் முழுவதும் நீடிக்கக்கூடும் எனவும், பகல்நேர வெப்பநிலை -9°C முதல் -20°C வரை நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி