கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள மாநகர சபை தயார் - வீதிகளைச் சீர்செய்யும் பணிகள் தீவிரம்

கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள மாநகர சபை தயார் - வீதிகளைச் சீர்செய்யும் பணிகள் தீவிரம்

எட்மன்டன் பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரை சுமார் 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை பலத்த பனிப்பொழிவு நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளைச் சீர்செய்வதற்காக மாநகர சபைப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அன்று பனிப்பொழிவு அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதான வீதிகளைச் (Priority Roadways) சீர்செய்வதற்காக கனரக இயந்திரங்கள் (Graders) ஈடுபடுத்தப்படவுள்ளன.

இது குறித்து எட்மன்டன் மாநகர சபையின் உட்கட்டமைப்புச் சேவைகள் பணிப்பாளர் செரில் பெர்டே (Cheryl Fereday) கருத்துத் தெரிவிக்கையில்:

"செவ்வாய்க்கிழமை அன்று வீதிப் பயன்பாட்டாளர்கள் சவாலான குளிர்காலச் சூழலை எதிர்பார்க்கலாம். எனவே, மக்கள் தமது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். எமது போக்குவரத்து வலையமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு," எனத் தெரிவித்தார்.

பனிப்பொழிவைத் தவிர, வெப்பநிலை மைனஸ் 15 பாகை செல்சியஸிற்கும் கீழாகச் செல்லக்கூடும் என்றும், காற்றின் குளிர்ச்சியுடன் சேர்த்து அது -20 பாகைக்கும் அதிகமாக உணரப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடும் உறைபனி நிலவக்கூடும் என்பதால், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதைகளில் படிந்துள்ள ஐஸ் கட்டிகளை அகற்றுவதற்கும் மாநகர சபை முன்னுரிமை அளித்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, முதற்கட்ட வாகனத் தரிப்பிடத் தடையை (Phase 1 Parking Ban) அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதனால், வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பான அறிவித்தல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள குறுஞ்செய்தி சேவைகளில் பதிவு செய்துகொள்ளுமாறும் எட்மன்டன்வாசிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி