இன்று திங்கட்கிழமை மாலை வேளையில் பிராந்தியத்தின் பல பகுதிகளில் கடும் மூடுபனி நிலவக்கூடும் என்பதால், வாகனச் செலுத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வெப்பநிலை பனி உறைநிலையை ஒட்டி காணப்படுவதால், 'உறைபனி மூடுபனி' காரணமாக மேலதிக ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் கேரி ஆர்க்கிபால்ட் (Gary Archibald) தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தில் மிதக்கும் நீர்த்துளிகள் வீதிகள் மற்றும் ஏனைய மேற்பரப்புகளில் பட்டவுடன் உறைந்து 'ஐஸ்' படலமாக மாறக்கூடும். இதனால் வீதிகள் மிகவும் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதுடன், பார்வைத்திறன் (Visibility) சடுதியாகக் குறையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்றைய தினம் இப்பிராந்தியத்திற்கு சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) மஞ்சள் நிற 'மூடுபனி எச்சரிக்கையை' விடுத்துள்ளது.
சில இடங்களில் பார்வைத்திறன் பூச்சிய நிலையை நெருங்கக்கூடும் என்பதால் வாகனப் பயணங்களின் போது மேலதிக நேரத்தை ஒதுக்குமாறும், பாதுகாப்பான வேகத்தைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய முக்கிய பகுதிகள்:
சாத்தம்-கென்ட் (Chatham-Kent)
மிடில்செக்ஸ் (Middlesex)
ஒக்ஸ்போர்ட் (Oxford)
எல்ஜின் (Elgin) உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.