அமெரிக்காவின் ரோட் தீவு (Rhode Island) மாநிலத்திலுள்ள போடக்கிட் நகரில் நடைபெற்ற இளையோர் ஹொக்கிப் போட்டியொன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அன்று போடக்கிட் நகரின் 'டெனிஸ் எம். லின்ச்' (Dennis M. Lynch) விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போடக்கிட் பொலிஸ் மா அதிபர் ரீனா கொன்சால்வ்ஸ் (Tina Goncalves), "இது ஒரு திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் எனத் தெரிகிறது; குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்," எனத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் வயது வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக (Critical condition) உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது அரங்கிற்குள் இருந்த சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பெரும் அச்சமடைந்தனர். சம்பவத்தின் பின்னர், விளையாட்டில் பங்கேற்ற மாணவர்கள் தமது சீருடைகளுடனேயே கண்ணீர்மல்க ஒருவரையொருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிக்கொண்டதைக் காணமுடிந்தது.
சம்பவ இடத்தைச் சூழவுள்ள வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸ் ஹெலிகொப்டர்கள் மூலமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி மற்றும் சாட்சிகளிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மசசூசெட்ஸ் எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள போடக்கிட் நகரம், சுமார் 80,000 மக்கள் வாழும் அமைதியான பகுதியாகும். இவ்வாறானதொரு விளையாட்டு நிகழ்வில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமையானது அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
