Patio அமைக்கப் புதிய கட்டணங்கள்; வெளிப்புற உணவகங்களை மூடுவதற்கு வணிகர்கள் தீர்மானம்?

Patio அமைக்கப் புதிய கட்டணங்கள்; வெளிப்புற உணவகங்களை மூடுவதற்கு வணிகர்கள் தீர்மானம்?

எட்மன்டன் மாநகர சபை அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'பதியோ' (Patio) கட்டண நடைமுறை காரணமாக, எதிர்வரும் கோடை காலத்தில் பல உணவகங்கள் தமது வெளிப்புற இருக்கை வசதிகளை முற்றாக நிறுத்திவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் (2020), சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் எவ்வித கட்டணமுமின்றி இந்த 'பதியோ' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், மாநகர சபையின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் வரவு செலவுத் திட்டக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, இனிவரும் காலங்களில் வணிகர்களுடன் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும் 'கூட்டு முதலீட்டு மாதிரியை' (Shared-investment model) அமுல்படுத்த சபை தீர்மானித்துள்ளது.

உபகரணங்கள் தினசரி அகற்றப்படாத நிலையான 'பதியோ' வசதிகளுக்கே இந்தக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நடைபாதை இருக்கைகள் (Small sidewalk patio): 500 டொலர்கள்.

வாகனத் தரிப்பிடப் பகுதிகளைப் பயன்படுத்தும் வசதிகள்: பருவக்கால (Seasonal) வசதிகளுக்கு 3,700 டொலர்களும், வருடம் முழுவதும் (Year-round) இயங்கும் வசதிகளுக்கு 6,900 டொலர்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்பு குறித்து 'எட்மன்டன் நகர மத்திய வணிக சங்கம்' (DBA) மாநகர சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு மற்றும் சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் ஏற்கனவே நலிவடைந்துள்ள உணவகத் தொழில்துறையினர், இந்தப் புதிய கட்டணங்களைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வணிக சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரொபின்சன் (James Robinson) கருத்துத் தெரிவிக்கையில்:

"மேலதிக கட்டணங்கள் காரணமாக பல உணவகங்கள் தமது வெளிப்புற இருக்கை வசதிகளை நிரந்தரமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பல உரிமையாளர்கள் தமது பதியோ அனுமதிப்பத்திரங்களை (Licences) புதுப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்," என்றார்.

"மாகாண நிதியுதவிகள் குறைந்துள்ள நிலையில், வருமானத்தை அதிகரிக்க பயனர் கட்டணங்களை (User fees) உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை," என நகர சபை உறுப்பினர் ஜோ-ஆன் ரைட் (Jo-Anne Wright) தெரிவித்துள்ளார். பதியோக்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளைக் கையாளுதல் போன்ற செலவுகளில் பாதியை மாநகர சபை ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டண நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. இது எட்மன்டன் நகரின் கோடை காலக் கலகலப்பைக் குறைப்பதுடன், உணவகத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி