'இலங்கை குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது': IMF ஆணையாளர் தெரிவிப்பு!

'இலங்கை குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது': IMF ஆணையாளர் தெரிவிப்பு!

மிகக் குறுகிய காலத்திற்குள் இலங்கை பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

"டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வளவு பாதிப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் மனவலிமையுடன் இருப்பதை நான் கண்டேன். அதேபோல், அரசாங்கம் மிகவும் வேகமாகவும் ஸ்திரமாகவும் செயற்பட்ட விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

"IMF அமைப்பினால் 200 மில்லியன் டொலர் அவசர நிதி உதவியை வழங்க முடிந்தது. அது சரியான நேரத்தில் வழங்கப்பட்டதால், இந்த விபத்தினால் ஏற்பட்ட வேதனையை அந்த மக்கள் தனித்துத் தாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

"உண்மையில் கடந்த தசாப்தத்தில் இலங்கை பல சவால்களை எதிர்கொண்டது. இப்போது நாட்டுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முதன்முறையாக மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒரு அரசாங்கம் உள்ளது. அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் தனது கடமையைச் செய்து வருகிறது.

"எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன், முதலாவதாக, மிகக் குறுகிய காலத்தில் பேரண்ட பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது 2% ஆகக் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்தில் இருந்து தற்போது 5% ஆக நேர் பெறுமானத்திற்கு உயர்ந்துள்ளது.

"ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ளது. ஒரு நாடு ஒற்றுமையாக இருக்கும்போதுதான் வெற்றி கிடைக்கும். அதனை அடைய அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

"உங்கள் ஒற்றுமையைக் கொண்டாடுங்கள். நீங்கள் ஒன்றாக இணையும்போது மிகவும் பலமானவர்கள். மக்களிடம் உள்ள தனித்துவமான பண்புகள் மூலம் உச்சகட்ட வெற்றியை அடையுங்கள். இது சிறந்த விருந்தோம்பல் பண்பைக் கொண்ட ஒரு நாடு, சுற்றுலாப் பயணங்களுக்கு மிகவும் பொருத்தமானது. சுற்றுலாத்துறை இந்த நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு துறையாகும்" எனத் தெரிவித்தார்.

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு விஜயத்தை இன்று (17) மேற்கொண்டுள்ளார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

"இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது.

"அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக" சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு மூலம் விரைவான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரண வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வரும் நேரத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவு குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வருத்தம் தெரிவித்ததோடு, இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

ஆயுத மோதல்கள், சுனாமிப் பாதிப்புகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், தொற்றுநோய்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு ஒரு புதிய பொருளாதார ஊக்கத்தின் அவசியத்தையும், வீடுகள், காணி, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளை முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டியதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அவசர நிதி உதவியை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பங்களிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மைகளை உறுதிப்படுத்தும் என்றும், எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு இந்த வேலைத்திட்டத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இங்கு மேலதிகமாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்துறையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் கிராமிய பொருளாதார மாற்றத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், காணி உரிமை மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து கிராமப்புறங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவதற்கும் ஒரு இடைக்கால மூலோபாய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.

அத்துடன், இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 'டித்வா' போன்ற பாரிய அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தமைக்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

'டித்வா' சவாலின் போது, நாட்டில் இதற்கு முன்னர் இருந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒன்றோடு ஒன்று அரசாங்கம் குழப்பிக் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடைந்துள்ள இந்தப் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.

மேலும், அனர்த்த நிலைமையினால் நாட்டின் கிராமப்புற குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும், அவர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் மனித வள மேம்பாட்டிற்கும் அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை மேலும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி